கிடப்பில் போடப்பட்டிருந்த இந்திய வீடமைப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி காட்டியவர் அமைச்சர் திகாம்பரம் : திலகர் எம்.பி

யுத்தம் முடிவடைந்த பின்னர் இந்திய அரசாங்கம் இலங்கைக்கு வழங்கிய 50000 வீட்டுத்திட்டத்தில் 46000 யுத்தத்தில் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்குபகுதிக்கு வழங்கப்பட மிகுதி 4000 வீடுகளே மலையகத்திற்கு கிடைத்தது.

அங்கு 46000 வீடுகள் கட்டிமுடிக்கபட்ட நிலையில் மலையகத்தில் நான்கு வருடங்களுக்கு மேலாக அது ஆரம்பிக்கப்படாமலேயே இருந்தது. தான் அமைச்சுப் பொறுப்பை ஏற்றவுடன் அதற்கான காரணத்தை கண்டறிந்து மலையகததில் இந்திய
வீடமைப்புத் திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்த பெருமை அமைச்சர் திகாம்பரத்தையே சாரும் என்று தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச்செயலாளரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.

மலையகத்திற்கான இந்திய வீடமைப்புத் திட்டத்தின் முதலாவது கட்டத்தின் ஒரு பகுதி பதுளை மாவட்டத்தின் ஹாலிஎல, லெஜர்வத்தை தோட்டத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்தநிகழ்வில், கலந்துகொண்டு உரையாற்றிய போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

இந்திய வீடமைப்புத்திட்டத்தை மலையகததில் நடைமுறைப்படுத்துவது தொடர்பில் பல்வேறு கால தாமதங்கள் இடம்பெற்றன. யுத்தம் முடிவடைந்த பின்னர் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு இந்திய அரசாங்கத்தினால் 50000 ஆயிரம் வீடுகள் அறிவிக்கப்பட்டபோது அதில் 4000 வீடுகளை மலையகத்திற்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

வடக்கு, கிழக்கில் 46000 வீடுகளை கட்டி முடித்த போதும் மலையகத்தில் அதனை நடைமுறைப்படுத்த முடியாமைக்கு அப்போது அமைச்சுப் பொறுப்பில் இருந்தவர்கள் நடவடிக்கை எடுத்திருக்கவில்லை. எனினும் 2015 ஆம் ஆண்டு அமைச்சர் திகாம்பரம் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சை பெறுப்பேற்றவுடன் மலையகத்தில் இந்திய வீடமைப்புத்திட்டத்தினை நடைமுறைக்கு கொண்டுவர முயற்சி மேற்கொண்டார். அப்போதுதான் மலையகத்தில் இந்திய வீடமைப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் இருந்த சிக்கல் தெளிவானது.

இந்திய வீடமைப்புத்திட்டத்தின் கொள்கையின்படி பயனாளியே வீட்டைக்கட்ட வேண்டும். அதற்கு குறித்த பயனாளிக்கு வீட்டுக்கான காணி இருக்க வேண்டும். வடக்கு, கிழக்கில் பயனாளிகள் காணிகளைக்கொண்டிருந்தனர். எனவே அங்கு
இலகுவாக அந்த திட்டம் நடைமுறைக்கு வந்தது. மலையகத்தில் நிலைமை அவ்வாறானதாக இருக்கவில்லை. மக்கள் காணியுரிமை அற்றவர்களாக இருந்தார்கள்.

அதனால் இந்திய அரசாங்கம் நிதியுதவி செய்ய முன்வந்தபோதும் வீடமைப்புத்திட்டம் மலையகத்தில் நடைமுறைக்கு வரவில்லை. இதனை சரி செய்யும்
வகையில் தமிழ் முற்போக்கு கூட்டணி அரசியல் ரீதியாக முன்வைத்த மலையக மக்களுக்கான வீட்டுக்கான ஏழு பேர்ச்சஸ் காணித்திட்டம் சட்டபூர்வமாக அந்த மக்களுக்கு பெற்றுக்கொடுக்கப்படுகின்றது. இப்போது இந்திய வீடமைப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் இல்லை.

இந்திய அரசாங்கம் நிதியையும், இலங்கை அரசாங்கம் காணியையும் பெற்றுக்கொடுக்கின்றது. காணியை வீடமைப்புக்கு ஏற்ற காணியாக மாற்றியமைப்பதிலும் அந்த வீடமைப்பு தொகுதிக்கு அடிப்படை உட்கட்டுமான
வசதிகளை பெற்றுக்கொடுப்பதிலும் அமைச்சர் திகாம்பரம் தனது அமைச்சின் ஊடாக ஒரு தொகுதி நிதியினை ஒவ்வொரு வீட்டுக்காகவும் ஒதுக்கீடு செய்கின்றார்.

பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் ஊடாக பெருந்தோட்ட கம்பனிகளும் தமது உதவிகளை வழங்குகின்றன. ஆலோசனை சேவைகளை பெறுவதற்கு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை, ஹெபிட்டாட் போன்ற நிறுவனங்களை இந்திய
உயர்ஸ்தானிகரகம் சுயாதீன நிறுவனங்களாக நியமித்துள்ளது. இவ்வாறு பலரின்
பங்களிப்போடு இந்திய வீடமைப்புத்திட்டம் நடைமுறைக்கு வந்தபோதும் அதன்
இறுதிப்பயனாளிகள் மக்களே.

மலையகத்தில் வீடமைப்புத்திட்டங்கள் எவ்வித பாகுபாடுமின்றி இடம்பெறுவதை
லெஜர்வத்தை வீடமைப்புத்திட்டமும் உறுதிப்படுத்துகின்றது. இந்திய
வீடமைப்புத்திட்டத்தின் முதற்கட்டமாக ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தெரிவும், பயனாளிகள் தெரிவும் முன்னைய ஆட்சி காலத்தில் திட்டமிட்டவாறே அப்படியே மாற்றமின்றி இப்போது  நடைமுறைப்படுத்தப்படுகின்றது. ஏட்டில் மாததிரம் திட்டமிடப்பட்டிருந்த இந்த திட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவந்த பெருமை அமைச்சர் திகாம்பரத்தையே சாரும் எனவும் தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]