காத்தான்குடி துப்பாக்கிச் சூட்டில் வயோதிபர் பலியான சம்பவம்- மூவர் கைது, மோட்டார் சைக்கிளும் மீட்பு

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடி 5,இல் வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்குச் சற்று முன்னர் நடந்த துப்பாக்கிச் சூட்டில் வயோதிபர் ஒருவர் பலியாகிய சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்த பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை 10.06.2018 காலையில் மூவரைக் கைது செய்திருப்பதாகத் தெரிவித்தனர்.

தமது தீவிர விசாரணையில் கிடைக்கப்பெற்ற திருப்பத்திற்கமைய சந்தேக நபர்கள் கொக்கட்டிச்சோலைப் பகுதியில் தலைமறைவாகியிருப்பதாகக் கிடைத்த தகவலை அடுத்து அங்கு சென்ற காத்தான்குடிப் பொலிஸார் சந்தேக நபர்கள் மூவரையும், அவர்கள் தப்பிச் செல்வதற்குப் பயன்படுத்தியதாகக் கருதப்படும் மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றியுள்ளனர்.

கைதாகியுள்ள சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த தாம் நடவடிக்கைகளை எடுத்து வருவதாகத் தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

புதிய காத்தான்குடி 5, கர்பலா வீதி, அலியார் சந்தியிலுள்ள அவர் நடாத்தி வந்த தேநீர்க் கடையில் இருக்கும்போது அங்கு வந்த இனந்தெரியாத மர்ம நபர்கள் வெள்ளிக்கிழமை இரவு 11.45 மணியளவில் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டு விட்டுத் தப்பிச் சென்றிருந்தார்கள்.

சூடுபட்ட முதியவர் ஸ்தலத்திலே சுருண்டு விழுந்து பலியாகியிருந்தார்.

பழனிபாவா என்று அழைக்கப்படும் 73 வயதுடைய ஆதம்பாவா முஹம்மத் இஸ்மாயில் என்பவரே இந்தத் துப்பாகிச் சூட்டில் பலியானார்.

சம்பவம் பற்றி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதும் தடயவியல் பரிசோதகர்களான பொலிஸாரும் புலனாய்வுப் பொலிஸாரும் ஸ்தலத்திற்கு விரைந்து கடமையில் ஈடுபட்டனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]