காத்தான்குடியில் 16 நாட்களில் 22 சிறுவர்கள் உட்பட 52 பேர் டெங்கினால் பாதிப்பு காத்தான்குடி ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் எம்.எஸ்.எம். ஜாபீர்
மட்டக்களப்பு, காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் இவ்வருட ஆரம்பம் முதற்கொண்டு கடந்த 16 நாட்களில் 22 சிறுவர்கள் உட்பட 52 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றிருப்பதாக அவ்வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எம்.எஸ்.எம். ஜாபீர் தெரிவித்தார்.
காத்தான்குடிப் பிரதேசத்தில் தலைதூக்கியுள்ள டெங்கு நோய் அச்சுறுத்தல் தொடர்பாக புதன்கிழமை 17.01.2018 அவர் கருத்து விவரம் தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் தெரிவித்த அவர், டெங்கு நோய்த் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு நுளம்புகளையும் நுளம்பு பெருகும் இடங்களையும் இல்லாதொழிப்பதே இதற்குச் சரியான தீர்வாகும்.
நமது வீடு, வீட்டுச் சூழல், சுற்றயல், மற்றும் பொது இடங்களை ஒவ்வொருவரும் ஆண் பெண் என்ற வேறுபாடின்றி சுத்தமாகப் பேண வேண்டும்.மேலும் அரச நிருவாக இயந்திரத்தில் உள்ள சகலரும் டெங்கு ஒழிப்புக்குரிய நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.
திட்டமிடப்பட்ட நகர மயமாக்கலை உள்ளுராட்சி நிறுவனங்கள் மேற்கொண்டு கட்டிடங்களையும் அவற்றைச் சூழவுள்ள இடங்களையும் கண்காணித்து டெங்கு நுளம்பு பல்கிப் பெருகுவதைத் தடுப்பதற்கும் உரிய உள்ளுராட்சி அதிகாரிகள் நடவடிக்கையை அமுல்படுத்த வேண்டும்” என்றார்.
இதேவேளை, காத்தான்குடியிலுள்ள சகல வீடுகளையும், கடைகளையும், உற்பத்தி இடங்களையும், அலுவலகங்களையும் இன்ன பிற இடங்களையும் நேரடியாகச் சென்று அந்த இடங்களின் சுற்றுச் சூழலைப் பரிசோதிக்கும் நடவடிக்கை புதன்கிழமை தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி யூ.எல். நஸர்தீன் தெரிவித்தார்.
டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகாத வண்ணம் சூழலைப் பேணுமாறு அவர் பிரதேசத்திலுள்ள பொதுமக்களுக்கும் அலுவலங்களில் பணியாற்றுவோருக்கும் வேண்டுகோள் விடுத்தார்.
கடந்த டிசம்பர் மாதம் 01ஆம் திகதி தொடக்கம் 31ஆம் திகதி வரை டெங்கு வைரஸ் தொற்றுக்குள்ளான 117 பேர் காத்தான்குடி ஆதார வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றிருந்தார்கள். இவர்களில் 56 பேர் சிறுவர்களும் குழந்தைகளுமாவர்.
இதேவேளை கடந்த டிசம்பர் மாதம் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் 6 மற்றும் 7 வயதுடைய சிறுமிகள் இருவர் டெங்கு நோயால் பீடிக்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சமயம் கடந்த மாதம் உயிரிழந்துள்ளனர்.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universalta
Twitter – www.twitter.com/Universaltha
Instagram – www.instagram.com/universalt
Contact us – [email protected]