காதலனுடன் சேரும் ஜப்பான் இளவரசி : அரச குடும்ப அந்தஸ்தை இழப்பார்

ஜப்பான் இளவரசி மாகோ, அரச குடும்பத்தை சாராத ஒருவரை திருமணம் செய்வதை அதிகாரபூர்வமாக உறுதி செய்யும்வகையில், திருமண நிச்சயதார்த்தம் அறிவிப்பு அரசரின் ஒப்புதலுடன் முறைப்படி வெளியிடப்பட்டது.

ஜப்பான் இளவரசி

நீண்ட திருமண நடைமுறை தொடங்குவதை கூறும் இந்த அறிவிப்பு, இளவரசி அரச அந்தஸ்தை இழப்பார் என்பதையும் சொல்லாமல் சொல்கிறது.

ஜப்பானின் ஏகாதிபத்திய சட்டத்தின்படி, சாதாரண குடிமகனை மணக்கும் ஒரு அரச குடும்ப பெண், அரச குடும்ப அந்தஸ்தை விட்டு விலக வேண்டும். ஆனால் ஒரு ஆண் உறுப்பினருக்கு இந்த சட்டம் பொருந்தாது.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய இளவரசி மாகோ, தனது முதல் சந்திப்பின்போது கே கொமுரோ `சூரியனைப் போல் உற்சாகமாக சிரித்ததாக` கூறினார்.

“என் திருமணத்திற்கு பிறகு அரச குடும்ப அந்தஸ்தை இழந்துவிடுவேன் என்பதை பால்ய பருவத்தில் இருந்தே அறிந்திருந்தேன்,” என்கிறார் மாகோ.

“அரசருக்கு உதவியாக, அரச குடும்ப உறுப்பினராக என்னால் முடிந்த அளவு கடமைகளை செய்துவந்திருக்கிறேன், அதே சமயத்தில் என் சொந்த வாழ்க்கையையும் நேசித்தேன்” என்கிறார் இளவரசி.

திருமண நிச்சயதார்த்தம் பற்றிய செய்தி உள்ளூர் ஊடகங்களில் மே மாதமே வெளியாகியிருந்தாலும், ஜப்பானின் இம்பீரியல் ஹவுஸ் ஏஜென்சியிலிருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு ஞாயிற்றுக்கிழமையன்றுதான் வெளியானது.

ஜப்பானில் மணிமுடி சூடும் அரசரை தேர்ந்தெடுக்கும் 1947 ஆம் ஆண்டு சட்டத்தின்படி, அரச குடும்பத்தின் ஆண் வாரிசுகள் மட்டுமே அரியணையில் ஏறமுடியும் என்பதால் இளவரசி மாகோ மகுடம் சூடும் வரிசையில் இல்லை.

இளவரசி மாகோவை திருமணம் செய்யவிருக்கும் மணமகன் கே கொமுரோ சட்ட நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார்.

இவர்கள் இருவரும் ஐந்து ஆண்டுகள் முன்னர் பல்கலைக்கழகத்தில் ஒன்றாக கல்வி பயின்ற போதுதான் காதல் மலர்ந்தது.

தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செய்தியாளர் கூட்டத்தில் பேசிய கே கொமுரோ, “சந்திரனைப் போல” இளவரசி அமைதியாக தன்னை கவனித்துக் கொண்டிருந்ததாக கூறினார்.

அடுத்த பட்டத்து இளவரசர் ஃபுமிஹிடோவின் மூத்த மகள் இளவரசி மாகோ 25 வயதானவர். இளவரசரின் அதிகாரபூர்வ வலைதளத்தில் அவரது பெயர் இளவரசர் அகிஷினோ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜப்பான் இளவரசி
BBC

இந்த திருமண நிச்சயதார்த்த அறிவிப்பு ஜூலை மாதத்திலேயே வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜப்பானின் மேற்குப்பகுதியில் பேரழிவை ஏற்படுத்திய மழை திருமண அறிவிப்பை தள்ளிப்போகச் செய்தது. ஜப்பானின் பொதுத்துறை ஒளிபரப்பு நிறுவனம் என்.எச்.கே வின் தகவல்களின்படி, திருமணம் அடுத்த ஆண்டு நடைபெறும்.

 

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]