காணொளிக் கமெராவின் உதவியுடன் திருடப்பட்ட தங்க நகைகள், பணம் மீட்பு

தங்க நகைகள்

காணொளிக் கமெராவின் உதவியுடன் திருடப்பட்ட தங்க நகைகள், பணம் மீட்பு, ஐவர் கைது

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வான் ஒன்றிலிருந்து மிகவும் சூட்சுமமான முறையில் திருடப்பட்ட 26 பவுண் தங்க நகைகளையும் திருடப்பட்ட 4 இலட்ச ரூபாய் பணத்தில் 1 இலட்சத்து 43 ஆயிரம் ரூபாய் பணத்தையும் காணொளிக் கமெராவின் உதவி கொண்டு செவ்வாய்க்கிழமை 27.02.2018 மீட்டுள்ளதாகவும் சந்தேக நபர்கள் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

தங்க நகைகள்

இச்சம்பவம்பற்றி மேலும் தெரியவருவதாவது,
கடந்த 14.02.2018 அன்று இரவு சம்மாந்துறையிலிருந்து குடும்பத்தினர் சிலர் கொழும்பு நோக்கி வான் ஒன்றில் சென்று கொண்டிருந்தபோது ஏறாவூர் ஓடாவியார் வீதியிலுள்ள நண்பர் ஒருவரின் வீட்டில் தேநீர் விருந்துபசாரத்திற்காக தரித்து நின்றுள்ளனர்.

சுமார் 45 நிமிடம் உபசாரத்தில் கலந்து கொண்டிருந்து விட்டு கொழும்பு சென்றுள்ளனர். அங்கு போய்ச் சேர்ந்ததும் தாங்கள் பொதியில் வைத்திருந்த 26 பவுண் தங்க நகைகளையும் 4 இலட்ச ரூபாய் பணத்தையும் தேடிய போது அது காணாமல் போயிருப்பது தெரியவந்துள்ளது.

தங்க நகை மற்றும் பணப்பை உள்ள பொதி தங்களது சம்மாந்துறை வீட்டில் தவறுதலாக எடுத்து வரப்படாமல் வைக்கப்பட்டிருக்குமோ என்ற சந்தேகத்தில் அங்கு தேடிய போது அங்கு அது இருக்கவில்லை.

அதன் பின்னர் ஏறாவூரில் தேநீர் விருந்துபசாரத்திற்காக தரித்து நின்ற வீட்டிலுள்ள காணொளிக் கமெராவைப் பரிசோதித்தபோது அங்கு வைத்து குறித்த பொதியை திருடர்கள் எடுத்துச் செல்வது காணொளிக் கமெராவில் பதிவாகியிருந்தது.

இதனையடுத்து ஏறாவூர் பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் துரிதமாகச் செயற்பட்டு திருடப்பட்ட நகைகளையும் பணத்தில் ஒரு பகுதியையும் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]