காணிகளை பகிர்ந்தளிப்பதில் இணக்கம்

‘தோட்டத் தொழிலாளர்களுக்கு காணிகளைப் பிரித்துக் கொடுக்க, பெருந்தோட்டக் கம்பனிகள் இணக்கம் தெரிவித்துள்ளதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் கல்வி அமைச்சருமான எஸ்.அருள்சாமி தெரிவித்தார்.

‘பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எதிர்கொண்டுவரும் பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு, பெருந்தோட்டக் கம்பனிகள் இணங்கியுள்ளன’ என்றும் அவர் கூறினார்.

பெருந்தோட்டக் கம்பனிகள் கூட்டொப்பந்தத்தை மீறும்வகையில் செயற்பட்டு வருவதால், தோட்டத் தொழிலாளர்கள் பல்வேறு பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸானது பெருந்தோட்டக் கம்பனிகளுடன் தனித்தனியாகப் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது.

இதுவரை ஒன்பது கம்பனிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள இ.தொ.கா, பேச்சுவாரத்தைகளில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பை சௌமியபவனில் நேற்று (13) நடத்தியது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு மேலும் கூறிய அவர், ‘இன்று பெரும்பாலான தோட்டக் கம்பனிகள் தோட்டத் தொழிலாளர்களின் ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி சேவைக்காலக் கொடுப்பனவு என்பவற்றை முறையாக செலுத்தமையினால், தொழிலாளர்கள் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர்.

பெரும்பாலானத் தோட்டங்களில், தொழிலாளர்கள் வேலைக்கு வருதில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

இதனால்இ வெளிநாடுகளிலிருந்து தொழிலாளர்களை அழைத்து வருவதற்கான யூகங்களும் பரவலாக நிலவி வருகின்றன. இவ்வாறான நிலைமைகளை தவிர்ப்பதற்கான ஆலோசனைகளையும் இ.தொ.கா , கம்பனிகளுக்கு முன்வைத்துள்ளது.

பெருந்தோட்டங்களிலுள்ள வளமுள்ள தேயிலைத் தோட்டங்களை, ஒரு குடும்பத்துக்கு ஆகக்குறைந்தது 2 அல்லது 3 ஏக்கர் வீதம் பிரித்துக்கொடுத்து, அதற்கான பசளை, இரசாயனங்கள், தேவையான ஆலோசனைகள் மற்றும் வழிநடத்தல்களை வழங்குமாறு தோட்டக் கம்பனிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளோம்.

கடந்த 5ஆம் திகதியிலிருந்து இதுவரை 9 கம்பனிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதுடன் எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் வாரம் ஏனைய 13 கம்பனிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]