இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது, சரணடைந்த பின்னர் இலங்கை படையினரின் தடுப்புக்காவலில் இருந்த 280 பேர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக, சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு காணமற்போனவர்களில் குறைந்தது 25 சிறுவர்களும் உள்ளடங்குவதாகவும், இவர்கள் 2009ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மைய நாட்களில் இவர்களின் குடும்பங்களுடன் இலங்கை இராணுவத்தின் பாதுகாப்பில் இறுதியாக காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, பெயர் விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
காணாமல் போனவர்களுக்கான இலங்கையின் அலுவலகமானது 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற சிவில் யுத்தத்தின் இறுதிநாட்களில் இடம்பெற்ற நூற்றுக்கணக்கான வலிந்து காணமல்போதல் சம்பவங்கள் தொடர்பிலான, உண்மையை கண்டறிய விரும்பினால், இந்த சம்பவங்கள் பற்றி யுத்தகால இராணுவத் தலைவர்களை விசாரணை செய்யும் தார்மீகக் கடப்பாட்டை கொண்டுள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
வலிந்து காணமல் போதல் தொடர்பில் பொறுப்புக்கூறுவதில் அரசாங்கம் உண்மையில் அக்கறையுடன் செயற்பட்டால், இந்த சம்பவம் தொடர்பில் முதலில் விசாரணை செய்ய வேண்டும் என காணாமல் போனவர்களுக்கான நிரந்தர அலுவலகத்திற்கு தாம் கடிதம் அனுப்பிவைத்துள்ளதாக சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்த குடும்பங்களுக்கு போரின் இறுதி நாட்களில் சரணடைந்தவர்களின் பட்டியலைக் கையளிப்பதற்கு இலங்கை இராணுவத்தின் 58 ஆவது படைப்பிரிவு தொடர்ந்தும் மறுத்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
58ஆவது படைப்பிரிவு சரணடைந்தவர்களை தனது பிடிக்குள் எடுத்துக் கொண்கொண்டிருந்ததாக ஐ.நா விசாரணையில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் இந்த படையணியை போர் குற்றவாளியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்லா அந்த நேரத்தில் வழிநடத்திச் சென்றார் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universaltamil
Twitter – www.twitter.com/Universalthamil
Instagram – www.instagram.com/universaltamil
Contact us – [email protected]