காணாமல் போனோர் அலுவலகத்துக்கு பெரும்பான்மை இனத்தவர்கள் அதிகளவில் பரிந்துரை

காணாமல் போனோர் அலுவலகத்தின் ஆணையாளர்களாக நியமிக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளவர்களில் அதிகமானவர்கள் பெரும்பான்மை இனத்தவர்கள் என தெரியவந்துள்ளது.

இதில் மூவர் மாத்திரம் தமிழ்மொழி பேசுபவர்கள் என்றும் ஏனைய நால்வரும் சிங்கள மொழி பேசுவோர் என்றும் அறிய முடிகின்றது.

புதிதாக உருவாக்கப்படவுள்ள காணாமல் போனோர் பணியகத்தின் ஆணையாளர் பதவிகளுக்கு நியமிப்பதற்காக ஏழு பேரின் பெயர்களை அரசியலமைப்பு சபை, ஜனாதிபதிக்கு முன்மொழிந்துள்ளது.

இவ்வாறு பரிந்துரைக்கப்பட்டவர்களில் நால்வர் சிங்களவர்கள் என்றும், இருவர் தமிழர்கள் என்றும், ஒருவர் முஸ்லிம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த சட்டத்தரணி ஜெயதீபா, முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த மனித உரிமைச் செயற்பாட்டாளரான கணபதிப்பிள்ளை வேந்தன் ஆகிய இரு தமிழர்களும், மீராக் ரகீம் என்ற முஸ்லிம் ஒருவருமே காணாமல் போனோர் பணியகத்தின் ஆணையாளர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.