காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்களுடனான ஜனாதிபதியின் சந்திப்பும் தொடர் நடவடிக்கைகளும் மீண்டும் சர்வதேசத்தை ஏமாற்றும் யுக்தியே

காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்களுடனான ஜனாதிபதியின் சந்திப்பும் தொடர் நடவடிக்கைகளும் மீண்டும் சர்வதேசத்தை ஏமாற்றும் யுக்தியே என்றும் அறவழியில் எமது போராட்டங்களை முன்னெடுக்க வருமாறு வடமாகாண மகளீர் விவகார அமைச்சர்  வேண்டு கோள்விடுத்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் தொடர்பாக இன்று அலுவலத்தில் பத்திரிகையாளர்களை சந்திப்பு இடம்பெற்றது. அந்த சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்களுடனான ஜனாதிபதியின் சந்திப்பும், அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படவிருக்கும் நடவடிக்கைகளும் மீண்டும் சர்வதேசத்தை ஏமாற்றும் யுக்தியாகவே இன்றைய நல்லாட்சி அரசு முன்னெடுத்து வருகின்றது. அதனை உறுதிசெய்வதாகவே காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்கள் சிலருடனான நேற்றைய ஜனாதிபதியின் சந்திப்பும் அமைந்துள்ளது.

காணாமல் போனோரின் உறவினர்களிடம் இருந்து முறைப்பாடுகளை பெற புதிய விண்ணப்பப்படிவம் ஒன்றை மாவட்ட செயலகங்கள் ஊடாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். அத்துடன் இந்த விண்ணப்பப்படிவம் ஊடாக அனைத்து தகவல்களையும் எதிர்வரும் டிசம்பர் 15 ஆம் திகதிக்கு முன்னர் சேகரிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாவட்ட செயலர்களுக்கு சுற்றுநிரூபம் ஒன்றை அனுப்புவதற்கும் ஜனாதிபதியால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சிலரை அழைத்து ஜனாதிபதி செயலகத்தில் மேற்கொண்ட சந்திப்பின் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியுள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழுவினால் சேகரிக்கப்பட்ட தகவல்கள் எங்கே போனது? போரின் இறுதி காலகட்டத்தில் இலங்கை இராணுவத்திடம் நேரடியாக கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள், கைது செய்யப்பட்டும் கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என அத்தனை விபரங்களும் அவரவர் உறவினர்களால் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டிருந்தது.

அவ்வாறு இருக்கையில் புதிதாக விண்ணப்பப்படிவம் அனுப்பி அவசரகதியில் விபரங்களை திரட்டுவதன் நோக்கம்தான் என்ன? ஏற்கனவே ஜனாதிபதி ஆணைக்குழுவினர் முன்னிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் வழங்கிய சாட்சியங்களின் மீது எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்காத நல்லாட்சி அரசாங்கம் இவ்விடயத்தில் நாடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சர்வதேச நாடுகளுக்கு காட்டிக்கொள்வதற்காகவே மீண்டும் மீண்டும் பதிவுகளை மேற்கொண்டு வருகின்றது.

இது அப்பட்டமான ஏமாற்று நாடாகம். கண்முன்னே உறவுகளை கையளித்துவிட்டு சொல்லொனாத் துயரத்தை அனுபவித்து வரும் எம்மை ஒரு கருவியாக்கி தமது அரசியல் நலன்களை நிறைவேற்றிக்கொள்ள முற்படும் செயலானது மனிதநேயமற்ற கொடுஞ்செயலாகும்.

எங்கள் உணர்வோடு விளையாடும் ஈவுஇரக்கமற்ற இச்செயற்பாட்டிற்கு துணைபோவது எம்மை நாமே விலைபேசுவதாகவே அமையும் என்பதால் எமது உறவுகள் இச்செயற்பாட்டை முழுவதுமாக புறக்கணிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கையில் இரகசிய சித்திரவதை முகாம்கள் இருப்பதையும் அதில் தமிழர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பது குறித்தும் சர்வதேச மனித உரிமை பிரதிநிதிகள் ஆதாரங்களுடன் வெளியிட்டிருந்தார்கள். இதனை முன்னால் ஜனாதிபதியும் இச்சம்பவங்களுடன் நேரடியாக தொடர்புடைய ஆட்சிக்காலத்தில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகவும் முப்படைகளின் தலைவராகவும் விளங்கிய மகிந்த ராஜபக்சே ஏற்றுக்கொண்டிருந்தார்.

சட்டவிரோத தடுப்பு முகாம்கள் குறித்து ஜனாதிபதியைச் சந்தித்த காணாமல் ஆக்கப்பட்டோராது உறவினர்கள் கேள்வியெழுப்பிய போது, அவ்வாறு இரகசிய முகாம்கள் எதுவும் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் இல்லையெனவும், அவ்வாறு எவரும் இரகசியமாக தடுத்து வைக்கப்படவில்லை எனவும் பதிலளித்துள்ளார்.

அவ்வாறு இரகசிய முகாம்கள் எதுவும் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் இல்லையெனக் குறிப்பிட்டதன் மூலம் கடந்த ஆட்சிக்காலத்தில் சட்டவிரோத தடுப்பு முகாம்கள் இருந்ததையும் அதில் தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்ததையும் ஏற்றுக்கொண்டுள்ளார் மைத்திரிபால சிறிசேன.

ஆகவே உங்களது ஆட்சிக்காலத்திற்கு முன்னர் இரகசிய தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் எங்கே? அவ்வாறு எவரும் இன்று இல்லை என்றால் அவர்களுக்கு என்ன நடந்தது? அதற்கு காரணமானவர்கள் யார்? இவற்றிற்கு பதில் கூறுவதுடன் இதனுடன் தொடர்புடையவர்கள் எவராயிருப்பினும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வழங்குவதற்கு உரிய நடவடிக்களை எடுக்க வேண்டியதும் இன்றை நல்லாட்சி அரசின் பொறுப்பாகும்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது விடயத்தில் செய்ய வேண்டியதை செய்யாது எம்மையும் சர்வதேசத்தையும் ஏமாற்றும் நோக்கில் கண்துடைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் இன்றைய நல்லாட்சி அரசும் கவனம்செலுத்தி வருவதையே மேற்படி விடயங்கள் தெட்டத்தெளிவாக உனர்த்துகின்றதாகவும் சுட்டிக்காட்டினார்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் உட்பட தமிழர்கள் எதிர்நோக்கியிருக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் சந்திப்புகளும், பேச்சுக்களும் பயனற்றவையாகும். அத்துடன் எமது போராட்டத்தை வலுவிழக்கச் செய்வதாகவும் அவை அமையும் என்பதை சம்பந்தப்பட்ட அனைவரும் உணர்ந்து கொண்டு நாங்கள் எமது கோரிக்கையில் உறுதியாக நின்று அதற்கான தீர்வு கிடைக்கும்வரை அறவழியில் தொடர்ந்து போராடுவது ஒன்றுதான் தமிழர்களாகிய எம்முன் உள்ள ஒரே தெரிவாகும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]