காணாமல்போனோர் சட்டமூலம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்

காணாமல்போனோர் அலுவலகத்தை அமைப்பதற்குரிய திருத்தச்சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நேற்று வாக்கெடுப்பின்றி திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.

2015 ஓகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட காணமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம்(தாபித்தலும், நிர்வகித்தலும், பணிகளை நிறைவேற்றுதலும்) சட்டத்தின் திருத்தச்சட்டமூலம் இரண்டாவது மதிப்பீட்டு விவாதத்திற்காக நாடாளுமன்றத்தில் நேற்று சமர்ப்பிக்கப்பட்டது.

ஆளும்,எதிரணி உறுப்பினர்கள் விவாதத்தில் பங்கேற்றிருந்தனர். இறுதியில் வாக்கெடுப்பின்றி திருத்தச்சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.

காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் ஊடாக யுத்தத்தின்போது காணாமல்போனவர்களைக் கண்டறிவதே பிரதான நோக்கம் என சபையில் சுட்டிக்காட்டிய பிரதமர் ரணில் விக்கிரம
சிங்க, அது யுத்தக்குற்ற விசாரணைக்கு ஒருபோதும் வழிவகுக்காது என்றும் உறுதியளித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் தொடர்பான திருத்தச் சட்டமூலத்தை சமர்ப்பித்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறியதாவது:

2016ஆம் ஆண்டு காணாமல்போனோர் அலுவலகம் தொடர்பாக சட்டமூல திருத்தம் செய்தோம். இதன்படி திருத்தம் செய்யப்பட்டு அமைச்சரவை அனுமதி பெறப்பட்ட பின்னரே சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நீண்டகாலம் நடைபெற்ற யுத்தத்தின் காரணமாக பலர் காணாமல்போயுள்ளனர். இதன் காரணமாக காணாமல்போனவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் ஆராய்ந்து பார்க்கும் நோக்குடனே காணாமல்போனோர் பற்றி காரியாலயம் நிறுவவுள்ளோம். இந்த காரியாலயத்தின் பணிகள் தொடர்பிலும் அதிகாரம் தொடர்பிலும் பலவித கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

காணாமல்போனோர் காரியாலயத்தின் ஊடாக யுத்த காலப்பகுதியின்போதும் அதன் பின்னரான காலப்பகுதியில் காணாமல்போனவர்கள் தொடர்பில் தேடிப் பார்ப்பதே பிரதான கடமையும் அதிகாரமுமாகும். காணாமல்போனவர்களை தேடுவதைத் தவிர எந்தவொரு அதிகாரமும் காணாமல்போனோர் காரியாலயத்துக்குக் கிடையாது. காணாமல்போனவர்கள் தொடர்பிலான சாட்சி பெற்றுக்கொண்டு அதன்மூலம் காணாமல்போனவர்கள் எங்கு உள்ளனர் என்பது தொடர்பில் தேடப்படும்.

காணாமல்போனவர்களுக்கு என்ன நடந்தது? அவர்கள் உயிருடன் உள்ளார்களா? என்பது குறித்தே குறித்த காரியாலயத்தால் ஆராயப்படும்.

சுமார் 30 வருடகால யுத்தம் தெற்கிலும் இருந்தது; வடக்கிலும் இருந்தது. யுத்தத்தின்போது காணாமல்போனோருக்கு என்ன நடந்தது என்பதைப் பற்றிமாத்திரமே நாம் ஆய்வு செய்வோம். அதற்கு மாறாக எக்காரணம் கொண்டும் எவருக்கு எதிராகவும் வழக்கு தாக்க செய்யமாட்டோம். வழக்கு தாக்கல்செய்வதற்கான எந்தவொரு அதிகாரமும் காணாமல்போனோர் காரியாலயத்துக்குக் கிடையாது.
யுத்தம் காரணமாக தமது உறவுகள், இழந்தவர்களை கண்டு பேசியுள்ளேன். யுத்தம் காரணமாக வடக்கில் வாழும் சாதாரண மக்கள் மாத்திரம் காணமால்போகவில்லை. சுமார் 5,000 படையினரையும் காணவில்லை. ஆகவே, அவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் நாம் ஆராயவேண்டியுள்ளது.

எனவே, இந்தப் பிரச்சினையை மேலும் வளர்க்கவிடாமல் உடன் தீர்வு காணவேண்டும். யுத்தம் காரணமாக வடக்கிலும் தெற்கிலும் ஏற்பட்ட காயங்களை உடன் ஆற்றவேண்டும். காயங்களை ஆற்றிக்கொண்டு ஒரே நாடு என்ற கொள்கையின் பிரகாரம் வாழவேண்டும்.

இந்நிலையில், காணாமல்போனவர்களுக்கான காரியாலயம் நிறுவியமை ஊடாக படையினருக்கு வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாகவும் யுத்தக் குற்ற விசாரணை மேற்கொள்ளவுள்ளதாகவும் கூறுகின்றனர். எக்காரணம் கொண்டும் இந்தக் காரியாலயத்தின் ஊடாக எவருக்கு எதிராகவும் வழக்கு தொடரமாட்டோம். அதேபோன்று யுத்தக் குற்ற விசாரணையை முன்னெடுக்க மாட்டோம். யுத்தக் குற்ற விசாரணைக்காக காரியாலயம் நிறுவவில்லை.

அத்துடன், நாம் உண்மையைக் கண்டறிய வேண்டும். இதற்கு தென்னாபிரிக்காவின் அனுபவத்தை நாம் பெறவுள்ளோம். இதன்படி உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவை நியமிக்கவுள்ளோம். உண்மையைக் கண்டறிவோம். அதன் பின்னர் தீர்வு காண்போம். முதலில் உண்மையைக் கண்டறியவேண்டும். இதன்போது ஒரு சரத்தை மாத்திரம் திருத்தம் செய்துள்ளோம். காணாமல்போனவர்களின் உறவினருக்கு தமது உறவுகளைத் தேடுவதற்கு உரிமை உள்ளது.

புதிய அரசமைப்பைத் தயாரிப்பதற்கான வழிநடத்தல், குழுவின் செயற்பாடு சீராக இயங்கி வருகின்றன. தற்போது இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பில் பல விடயஙகள் தொடர்பில் இணக்கத்திற்கு வந்துள்ளோம். மேலும் பல விடயங்களில் இணக்கத்திற்கு வரவேண்டியுள்ளது. ஆகவே, நாட்டின் பிரதான பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணவேண்டியது அவசியம் என்
றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]