காட்டு யானைத் தடுப்பு வேலிகளைக் களவாடுதல், சேதப்படுத்துதல் கண்டிக்கத் தக்கதும் குற்றச் செயலுமாகும் மாவட்ட அரசாங்க அதிபர் உதயகுமார்

மட்டக்களப்பு மாவட்டத்தில் காட்டு யானைகளிடமிருந்து கிராமத்தவர்களையும் விவசாயத்தையும் பாதுகாப்பதற்கென அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வேலிகளை களவாடுதல் மற்றும் சேதப்படுத்துதல் கண்டிக்கத்தக்கது என்றும் இதுவொரு குற்றச் செயல் என்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக செவ்வாய்க்கிழமை 23.10.2018 ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், மாவட்டத்தின் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர்; பிரிவுக்குட்பட்ட கற்பானைக் குளம், மற்றும் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் கித்துள் ஆகிய பிரதேசங்களில் அமைக்கப்பட்டிருந்த காட்டு யானைத் தடுப்பு வேலிகள் கடந்த சில தினங்களுக்குள் களவாடப்பட்டுள்ளன.

கிராம மக்களை காட்டு யானைகளிடமிருந்து பாதுகாப்பதற்காக அமைக்கப்படுகின்ற வேலிகள் சேதப்படுத்தப்படுதல் மற்றும் களவாடப்படுவதனால் அப்பாவி மக்களே பாதிப்புக்களை எதிர் கொள்கின்றனர்.

இந்த வேலிகள் களவாடல் செயற்பாடுகளை அடுத்து சிவில் பாதுகாப்புப் படையினரை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக நடைபெறும் இவ்வாறான செயற்பாடுகள் குறித்து பொதுமக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என்பதுடன் இவற்றினைப் பாதுகாப்பதும் பொதுமக்களின் கடமையாகும் என்றும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]