புதூர் பிரதேசத்தில் காட்டு யானைகளின் அட்டகாசத்தினால் வீடுகள் சேதம்!!

மட்டக்களப்பு – உறுகாமம்- புதூர் பிரதேசத்தில் 05.03.2018 திங்கட்கிழமை அதிகாலை காட்டு யானைகளின் அட்டகாசத்தினால் வீடுகள் சேதமாக்கப்பட்டுள்ளதுடன் சேனைப்பயிர்களும் துவம்சம் செய்யப்பட்டுள்ளன.

நள்ளிரவு வேளையில் மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த காட்டு யானைகள் வீட்டின் சுவர்களை உடைத்து அங்கு மூடைகளில் அடுக்கப்பட்டிருந்த நெற்களையும் சமையலறையிலிருந்த இதர உணவுப்பண்டங்களையும் உட்கொண்டுள்ளதுடன் மரவள்ளி மற்றும் வாழைத்தோட்டங்களை துவம்சம் செய்துள்ளன.

எனினும் வீட்டுரிமையாளர்கள் அங்கு தங்கியிருக்காததனால் உயிராபத்துக்கள் ஏற்படவில்லையென தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஒருவாரகாலமாக தொடர்ச்சியாக உறுகாமம் – புதூர்ப் பிரதேசத்தில் காட்டு யானைகள் அட்டகாசம் புரிவதாகவும் இதனால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன் உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அப்பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

கடந்தகால அசாதாரண சூழ்நிலையின்போது இடம்பெயர்ந்து சுமார் 25 வருடங்களின் பின்னர் மீளக்குடியமர்ந்துள்ள இம்மக்களுக்கு காட்டு யானைகளினால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]