கல்வி வீழ்ச்சிக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் பொறுப்புக்கூறல் வேண்டும் இலங்கை ஆசிரியர் சங்கம்!!

மட்டக்களப்பு திருகோணமலை மாவட்டங்களின் கல்வி வீழ்ச்சிக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் பொறுப்புக்கூற வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் கேட்டுள்ளது.

இது தொடர்பாக அச்சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் பொன்னுத்துரை உதயரூபன் செவ்வாய்க்கிழமை 24.04.2018 வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சமீபத்தில் வெளியாகிய க.பொ.த (சாஃத) பரீட்சை முடிவுகளின்படி மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களின் கல்வி அடைவில் பாரிய வீழ்ச்சி காணப்பட்டுள்ளது.

இலங்கையில் உள்ள 25 கல்வி நிர்வாக மாவட்டங்களில் மட்டக்களப்பு மாவட்டம் 22வது நிலையையும், திருகோணமலை மாவட்டம் 23வது நிலையையும் தேசிய ரீதியில் கிழக்கு மாகாணம் 8ம் இடத்தையும் பெற்றுள்ளமைக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தின் வினைத்திறனற்ற அதிகாரிகளின் செயற்பாடுகளே காரணம்.

இந்தப் பின்னடைவுக்கு கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களமே பொறுப்புக்கூற வேண்டும்.

மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் அமைந்துள்ள சில கல்வி வலயங்கள் அரசியல் நிரல்களை அமுல்படுத்துவதிலும் முழுமையாக அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளமை போன்றுள்ள செயற்பாடகளுமே கல்வி வீழ்ச்சிக்கான பிரதான காரணமாக அமைந்துள்ளதென கல்விப் புலத்திலுள்ள நோக்கர்களால் சுட்டிக்காட்டப்படுகின்றது.

மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் தகுதியான வலயக்கல்விப் பணிப்பாளர்களையும் கல்வி அதிகாரிகளையும் நியமிப்பதற்கு அரசியல்வாதிகள் தடையாக இருப்பதோடு சட்டத்திற்கு முரணான உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் ஆசிரிய ஆலோசகர்கள் அதிபர்கள் ஆகியோர் மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் நியமிக்கப்பட்டமையும் மற்றொரு காரணம் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், வினைத்திறன் மிக்கதும் தரமான கல்வியை வழங்கக்கூடிய பல ஆசிரியர்கள் இடமாற்றம், மற்றும் விசாரணகளில் பழிவாங்கப்பட்டு பொருத்தமற்ற பாடசாலைகளில் இணைக்கப்பட்டுள்ளமையும் நாடாளுமன்ற விவாதங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்திலுள்ள பெரும்பாலான கல்வி அதிகாரிகள் சேவைப் பிரமாணக் குறிப்புக்கு அமைவாக பாடசாலை மேற்பார்வைகளில் வினைத்திறனாக தமது சேவைப் பணிகளில் ஈடுபடுவதில்லை என்பதும் தெரிந்ததே.

கிழக்கு மாகாணத்தில் பின்னடைவாக உள்ள கல்வி வலயங்களின் கல்வி அபிவிருத்தியில் வினைத்திறனான திட்டமிடல் செயற்திட்டங்கள் மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் அந்த அறிக்கை சாடுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]