கல்வி இராஜாங்க அமைச்சரானார் விஜயகலா மகேஸ்வரன்

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் மீளவும் கல்வி இராஜாங்க அமைச்சராகப் பதவியேற்றார்

ஜனாதிபதி செயலத்தில் சற்றுமுன்னர் இடம்பெற்ற ஐக்கிய தேசிய முன்னணி அரசின் பிரதி, இராஜாங்க அமைச்சர்கள் நியமனத்தின் போதே அவருக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டது. அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் உறுதியுரை எடுத்துக்கொண்டார்.

யாழ்ப்பாணத்தில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற அரச நிகழ்வில் உரையாற்றிய விஜயகலா மகேஸ்வரன், தமிழீழ விடுதலைப் புலிகளின் கை ஓங்கவேண்டும் என்று தெரிவித்தார்.

அவரது கருத்து தெற்கில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதனால் விஜயகலா மகேஸ்வரன் மீது ஐக்கிய தேசிய கட்சி ஒழுக்காற்று நடவடிக்கையை முன்னெடுப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றுக்கு அறிவித்தார். அத்துடன், விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக கொழும்பு நீதிவான் நீதிமன்றில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
அந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் சிறுவர் மற்றும் மகளிர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சராகவிருந்த விஜயகலா மகேஸ்வரன், தனது அமைச்சுப் பதிவிலிருந்து கடந்த ஜூலை மாதம் 5ஆம் திகதி விலகிக்கொண்டார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]