கல்வி அமைச்சர் வரலாற்றை மாற்றியமைக்க பார்க்கிறார் : இடமளிக்க முடியாது என்கிறார் ஜெனார்த்தனன்

“”ஆளுந்தரப்பு அமைச்சர் வரலாற்றைத் திரிபுபடுத்த முயற்சிக்கக்கூடாது. கன்னியா மற்றும் குச்சவெளி ஆலயங்கள் புராதன இந்து ஆலயங்கள். இவற்றை மறுத்து பௌத்த ஆலயம் என்று நாடாளுமன்றத்தில் நல்லாட்சி அரசின் கல்வி அமைச்சரே கூறும் பொய்யான வரலாறுகளைக் கேட்டுக்கொண்டு நாம் தொடர்ந்து மௌனியாக இருக்கமுடியாது’’ என்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெ.ஜெனார்த்தனன் தெரிவித்தார்.
நேற்று நாடாளுமன்றத்தில் கேள்விக்குப் பதிலளிக்கும்போது, கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கன்னியா மற்றும் குச்சவெளி செம்பீஸ்வரர் ஆலயங்கள் உள்ள இடத்தில் பௌத்த விகாரைகள் இருந்தாகக் கூறிய கருத்து தொடர்பில் ஜெனார்த்தனன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கன்னியா என்பது இராவணன் காலத்திலிருந்து இந்துக்களுக்கு உரித்தானது. அது மட்டுமன்றி காலம் காலமாக எமது மக்கள் அங்கு அந்தியெட்டி கிரியைகள் உள்ளிட்ட பல கிரியைகளையும் பூசைகளையும் நிகழ்த்தி வந்துள்ளனர். தற்போதும் இவை தொடர்கின்றது.

இந்தச் சூழ்நிலையில் இந்தப் புண்ணிய இடத்தை பௌத்த இடத்துக்குரியது எனக் கூறுவது நீதிக்குப் புறம்பானது. 2011ஆம் ஆண்டு காலம் வரை உப்புவெளி பிரதேச சபையில் பராமரிக்கப்பட்டுவந்த கன்னியா வெந்நீருற்று பகுதியானது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் எதேச்சதிகாரமாக பிரதேச சபையிடமிருந்து பறிக்கப்பட்டது.

இன்று நல்லாட்சி அரசிலும் பொறுப்புவாய்ந்த அமைச்சராக இருந்துகொண்டு கடந்த அரசு செய்த தவறுக்கு ஆதரவுத் தெரிவிப்பதுபோல் பேசும் கல்வி அமைச்சரின் செயற்பாடு ஏற்புடையதல்ல.

அம்பாறை மாவட்டம் மகா ஓயா பிரதேச சபைக்குட்பட்ட வெந்நீர்க் கிணறுகள் இருக்கின்றபோதும் இதனைப் பராமரித்து முழு வருமானத்தையும் பெறுவது மகாஓயா பிரதேச சபையாகும்.இவ்வாறு மகாஓயா பிரதேச சபைக்கு வழங்கமுடியுமானால் ஏன் கன்னியாவை பட்டிணமும் சூழலும் பிரதேச சபைக்கு வழங்கமுடியாது. இலங்கையில் ஒவ்வொரு சட்டமும் ஒவ்வொரு பகுதிகளுக்கும் வேறுபட்டதாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.

குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட செம்பீஸ்வரர் ஆலயத்தை நாம் இன்னும் புனர் நிர்மாணம் செய்ய முடியாத அதேநேரம் வெருகல் பிரதேசத்திலுள்ள கல்லடி மலைநீலியம்மன் இருந்த இடம் உடைக்கப்பட்டு பௌத்த விகாரை அமைக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் துறைமுகத்துவாரம் முருகன் ஆலயமும் தகர்க்கப்பட்டு இன்று லங்கா பட்டண என்ற பெயரில் விகாரை அமைக்கப்பட்டுள்ளது. கன்னியா வெந்நீருற்றுப் பகுதியிலுள்ள பிள்ளையார் ஆலயமும் நிர்மூலமாக்கப்பட்டு அங்கும் விகாரை கட்டப்பட்டுள்ளது. எமது ஆலயங்களைப் புனர்நிர்மாணம் செய்யமுடியாமல் நாம் அதிகாரங்களுக்குள் அழுத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றோம்.

இவ்வாறே வடக்கு, கிழக்கிலுள்ள தொல்பொருள் திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரிகளில் எத்தனை பேர் தமிழ் பேச தெரிந்தவர் என்பதை அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அறிவாரா? தமிழர்களை விரல் விட்டு எண்ணக்கூடிய தொல்பொருள் திணைக்கள ஆய்வுகளில் எமக்கு நம்பிக்கை இல்லை. இதேபோன்றுதான் குளக்கோட்டு மன்னன் காலத்தில் கட்டப்பட்ட கந்தளாய் குளத்தையும் 2ஆம் அக்போ மன்னன் கட்டியது என வரலாற்றை மாற்றியமைத்துள்ளனர்.

இவற்றை எல்லாம் பார்த்துக்கொண்டு தொடர்ந்தும் நாம் வாய்மூடி மௌனிகளாக இருக்கமுடியாது என்றும் கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]