கல்வி அமைச்சர் தன்னிடமிருந்த அதிகாரங்களை சரியான முறையில் பயன்படுத்தவில்லை : சீனிதம்பி யோகேஸ்வரன்

கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் தனது பதவிக் காலத்தில் பணிகளை சிறந்த முறையில் செய்துள்ளாரா என்பது என்னைப் பொறுத்தவரை கேள்விக்குறியாகவே உள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனிதம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.

கல்வி அமைச்சர் தன்னிடமிருந்த அதிகாரங்களை சரியான முறையில் பயன்படுத்தவில்லை தமிழ் பகுதிகளில் சரியான முறையில் வளப்பங்கீடு செய்யப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

மட்டக்களப்பு ஐயன்கேணி தமிழ் மகாவித்தியாலயத்தில் நேற்று (07) சனிக்கிழமை நடைபெற்ற முப்பெரும் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் – நாட்டிலுள்ள ஒன்பது மாகாணங்களில் கல்வித்துறையில் நாங்கள் இறுதி நிலையில் உள்ளோம். கடந்த கால யுத்தம் கல்வி வீழ்சியில் செல்வாக்க செலுத்துகிறது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது யுத்ததினால் வட மாகாணத்தில் பல அழிவுகள் நடைபெற்றுள்ளன. அந்த மாகாணம் கல்வியில் பெருவாரியான வீழ்ச்சியைக் காணவில்லை. கிழக்கு மாகாணத்தில் தமிழ் பிரதேசங்களில் கல்வித்துறையில் மிகக்குறைவான வளத்துடன் காணப்படுகிறது.

கிழக்கு மாகாணசபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு – முஸ்லிம் காங்கிரஸ் இணைந்த ஆட்சியில் முதலமைச்சர் பதவி கிடைக்காத நிலையில் இரண்டு அமைச்சுக்களையும் ஒரு பிரதித்தவிசாளர் பதவியையம் பெற்றோம். அதிலே கல்வி அமைச்சும் எமது கட்சி சார்பாக பெறப்பட்டது.

எனது பார்வையில் அவரது காலப்பகுதியில் தமிழ் பிரதேசங்களில் சரியான முறையில் வளங்கள் பங்கீடு செய்யப்படவில்லை அதிகாரங்கள் பயன்படுத்தப்பவில்லை.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலகப் பரிவுகளில் 10 தமிழ் பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் வறுமை அதிகம் காணப்படுகிறது. ஆனால் கிழக்கு மாகாண ஆட்சியில் தமிழ்ப் பிரதேசத்தின் அபிவிருத்திகள் பெறும் கண்துடைப்பாகவே அமைந்தன.

மத்திய அரசாங்கத்தில் நாங்கள் எதிர்கட்சியில் இருந்தாலும் இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்திலி; நியாயமான முறையில் அணுகி பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக சில விடயங்களில் அரசுக்கு ஆதரவு வழங்குகிறோம். ஆனாலும் மத்திய மற்றும் மாகாண அரசுகளில் ஒதுக்கீடுகளில் பாராபட்சம் காணப்படுகிறது அதற்கான தரவுகள் அனைத்தும் என்னிடம் உள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 74 சதவீதம் தமிழ் மக்கள் வாழ்கின்ற போதிலும் அபிவிருத்தியில் மற்றுமொரு சமூகம் முன்னேற்றமடைந்துகொண்டு செல்கிறது. நான்அவர்களை குறைகூறவில்லை ஆனால் யுத்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட தமிழ் சமூகத்தைப்பற்றியும் சிந்திக்க வேண்டும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பைப் பொறுத்தவரை நாங்கள் தமிழ் பேசும் சமூகாகவே அவர்கைளப் பார்க்கிறோம். இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வொன்று கிடைக்ககும்போது அது தமிழ் பேசும் சமூத்திற்கான தீர்வாக அமைய வேண்டும்” என்றார்