கல்லுண்டாய் குப்பை மேட்டுக்கு தீர்வு

கல்லுண்டாய்

யாழ்ப்பாணம் – காரைநகர் வீதி கல்லுண்டாயில் குப்பைகளைக்
கொட்டுவதற்கு யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து மல்லாகம் நீதிவான் நீதிமன்று இன்று கட்டளை வழங்கியது.

“குப்பை மேட்டை சூழ 3 மாதங்களுக்குள் வேலியமைக்கவேண்டும்.
மலக்கழிவுகள் கொட்டத்தடை, கழிவுகளை எரிக்கத்தடை, பிளாஸ்டிக் கழிவு முகாமைத்துவம், கழிவு நீரை உரிய முறையில் முகாமைத்துவம் செய்யவேண்டும்” ஆக கட்டுப்பாடுகளை விதித்து மல்லாகம் நீதிவான் கட்டளையிட்டார்.

கல்லுண்டாயில் திண்மக் கழிவுகள் கொட்டப்படும் இடத்துக்கு நேரில் சென்றெ பார்வையிட்ட மல்லாகம் மாவட்ட நீதிபதி அந்தோனிப்பிள்ளை ஜுட்சன் இந்த உத்தரவை வழங்கினார்.

யாழ்ப்பாணம் மாநகர சபையால் அகற்றப்படும் திண்மக் கழிவுகள் யாழ்.- காரைநகர் வீதி கல்லுண்டாய் பகுதியில் கொட்டப்பட்டு வருகின்றன. அத்துடன், மலக்கழிவுகளும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகளும் அந்த இடத்தில்தான் போடப்படுகின்றன.

அங்கு கொட்டப்படும் திண்மக் கழிவுகள் தொடர்பில் யாழ். மாநகர சபை சீரான முகாமையைப் பேணுவதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வந்தது.

மேலும் குப்பைகள் இயற்கை உயிரியல் வாயுவின் அதிகரிப்பால் தீப்பிடித்து எரிகின்றன. சிலசந்தர்ப்பங்களில் வைத்தியசாலைக் கழிவுகள் மாநகர சபை ஊழியர்களால் எரியூட்டப்படுகின்றன.

இதனால் அதனைச் சூழவுள்ள நவாலி, அராலி, ஆனைக்கோட்டைப் பகுதி மக்கள் பாதிக்கப்படுகின்றனர். குப்பை மேட்டால் எழும் புகை மண்டலத்தால் போக்குவரத்தில் ஈடுபடுவோரும் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்.

இந்த நிலையில் நவாலி மக்கள் சார்பில் சட்டத்தரணி கே.சுகாஷ் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் பொது நல வழக்கைத் தாக்கல் செய்தார்
அந்த வழக்கு கடந்த இரண்டு வருடங்களாக விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று கட்டளை வழங்கப்பட்டது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]