கல்குடா மதுசார உற்பத்தி நிலையத்தை லஞ்சம் வழங்கி அமைக்க முயல்வதேன்? : யோகேஸ்வரன் கேள்வி

கல்குடா மதுசார உற்பத்தி நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்புகள் வரக்கூடாது என்பதற்காக பெருந்தொகையான பணம் வாரிவழங்கப்படுகின்றது. விளையாட்டுக்கழகங்கள், ஆலயங்கள்,பொது அமைப்புகளுக்கு பெருமளவு பணம் வழங்கப்படுகின்றது. அவ்வாறு இலஞ்சம் வழங்கி அந்த தொழிற்சாலை கட்டவேண்டுமா?

இவ்வாறு மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு பார் வீதியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

“”தமது பிள்ளைகளை வழிநடத்தத் தெரியாத தமிழர் ஐக்கிய சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் கமலதாஸ் போன்றவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஊடகவியலாளர்கள் தொடர்பில் கதைப்பதற்கு அருகதையற்றவர்கள்.

அண்மையில் மட்டக்களப்பில் 200க்கும் மேற்பட்ட யுவதிகளின் நிர்வாணப் படங்களை இணையதளங்களில் வெளியிட்டமை தொடர்பில் கமலதாஸின் மகன் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

அது தொடர்பிலான விவரங்களை ஊடகவியலாளர்கள் வெளிக்கொணர்ந்திருக்க வேண்டும். அன்று அதனைச் செய்திருந்தால் இன்று ஊடகவியலாளர்களுக்கு எதிராக அவர் கதைக்கும் நிலை ஏற்பட்டிருக்காது.
இதேவேளை, கல்குடா பிரதேசம் சுற்றலாப் பகுதியாகும். அங்கு சுற்றுலா தொடர்பான பல்வேறு விடுதிகள் அமைக்கப்படுகின்றன.குறித்த மதுசார உற்பத்தி நிலையம் அமைக்கப்படும்போது மதுசார உற்பத்தி நிலையம்தான் அமைக்கப்படுகின்றது என்பது எவருக்கும் தெரியாது. ஆனால் அது தொடர்பிலான தகவல்கள் கிடைக்கப்பெற்றதும் நான் நடவடிக்கையெடுத்து வருகின்றேன்.

குறித்த மதுபானசாலையை அமைப்பதற்கான அனுமதியை பிரதேசசபை வழங்கவில்லை. குறித்த மதுபானசாலை தொடர்பிலான தகவல்களை வெளிக்கொணர்ந்து அதனை நிறுத்தவேண்டும் என்று நான் பிரதேச அபிவிருத்திக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றினேன்.

அதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்ய வில்லையென்று இன்று கமலதாஸ் கூறுகின்றார். பிரதேச, மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் தீர்மானத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே கொண்டுவந்து நிறைவேற்றியுள்ளது.

இன்று அந்த மதுசார உற்பத்தி நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்புகள் வரக்கூடாது என்பதற்காக பெருந்தொகையான பணம் வாரிவழங்கப்படுகின்றது. விளையாட்டுக்கழகங்கள், ஆலயங்கள்,பொது அமைப்புகளுக்கு பெருமளவு பணம் வழங்கப்படுகின்றது. அவ்வாறு இலஞ்சம் வழங்கி அந்த தொழிற்சாலை கட்டவேண்டுமா?.

தொழிற்சாலை அமைப்பது தொடர்பில் இதுவரை சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து சரியான அனுமதிப்பத்திரங்கள் பெறப்படவில்லை. இது தொடர்பில் ஆராயப்படவேண்டும். இது குறித்து பேசும் புத்திஜீவிகள் அமைப்புகளுக்கு கூட பல விடயங்கள் தெரியாது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பல விடயங்களை ஆராயாத இந்த புத்திஜீவிகள், இந்த மதுசார உற்பத்தி நிலையத்தில் அக்கறைகாட்டி வருகின்றனர். கடந்த காலத்தில் கிழக்கு பல்கலைக்கழகத்தில் பல்வேறு மோசடிகள் இடம்பெற்றன. அது சார்பாக இந்த புத்திஜீவிகள் வாய்திறக்கவில்லை. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பல்வேறு குறை பாடுகள் இருந்தன. அது தொடர்பில் வைத்தியராகவுள்ள புத்திஜீவிகள் வெளிப்படுத்தவில்லை.

மட்டக்களப்பில் தமிழ் மக்கள் பாதிக்கப்பட்ட சந்தர்ப்பங்களில் எல்லாம் வாயைப் பொத்திக்கொண்டிருந்தவர்கள், மதுசார உற்பத்திச்சாலை வரும்போது அதற்கு வியாக்கியானம் செய்ய வருகின்றார்கள் என்றால் அதன் பின்னணியில் பல விடயங்கள் தங்கியுள்ளன என்பதே உண்மை. அதனை எவரும் மறுக்கமுடியாது.

இந்த மதுசார உற்பத்தி நிலையத்தின் பாதிப்பைச் சுட்டிக்காட்டி மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆறு மாகாணசபை உறுப்பினர்களுமாக பன்னிரண்டுபேர் கையொப்பத்தை வழங்கியிருக்கின்றோம்.

ஜனாதிபதி போதையற்ற நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கின்றார். அந்தவகையில், இந்த மதுசார உற்பத்தி நிலையம் இங்கு ஸ்தாபிக்கப்படுவதை அவர் ஏற்கின்றாரா, இல்லையா என்பது தொடர்பில் அவருடைய பதிலை நாங்கள் எதிர்பார்க்கின்றோம்” என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]