கல்குடா பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டம்

கல்குடா வில் அமைக்கப்படும் எதனோல் தொழிற்சாலையில் பிரதேச வாசிகளுக்கே தொழில் வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படும் என்று மட்டக்களப்பு மாவட்ட புத்தி ஜீவிகள் சிலர் தெரிவித்திருந்தனர். ஆனால் அங்கு கடமையாற்றுவதற்கு இந்தியாவில் இருந்து ஊழியர் வந்திருப்பது கவலைக்குரிய விடயம் என கிராமிய பொருளாதார அலுவல் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

வாழைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை இணைத் தலைவர்களான பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்-

எதனோல் தொழிற்சாலையில் கடமையாற்றுவதற்கு இந்தியாவில் இருந்து ஊழியர்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாக கோறளைப்பற்று பிரதேச சபை செயலாளர் இக்கூட்டத்தில் தெரிவித்தார். இந்தியாவில் இருந்து தொழிலுக்காக வரவழைக்கப்பட்டால் இங்குள்ளவர்களுக்கு எவ்வாறு தொழில் வழங்குவது.

எதனோல் தொழிற்சாலை ஆரம்பிக்கப்படும் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் எதிர்ப்புக்கள் எழுந்தன. அச்சந்தர்ப்பத்தில் மாவட்டத்தில் உள்ள சில புத்திஜீவிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் எதனோல் தொழிற்சாலை அமைக்கப்படுவதால் மாவட்டத்தில் தொழில் வாய்ப்பு வழங்கலாம் என்றும், இதனால் மாவட்டத்தில் வருமானம் கிடைக்கும் என்றும் தெரிவித்தனர்.

இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்த மக்கள் பலர் கோடீஸ்வரர்களாக உள்ளனர். இவர்கள் மூலம் மாவட்டத்தில் பிரயோசமான தொழிற்சாலைகளை நிறுவி தொழில் வழங்க முடியும், மதுபானசாலைகளை அமைத்துத்தான் மக்களுக்கு தொழில் வழங்க முடியும் என்பது பிரயோசனம் இல்லை என்றார்.

கோறளைப்பற்று பிரசே செயலக பிரிவில் 2017ம் ஆண்டில் கிராமிய பொருளாதார அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தில் ஒன்பது வேலைகளுக்கு 4.95 மில்லியன் ரூபாவும், பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருப்பத்தாறு வேலைத் திட்டத்திங்களுக்கு 3.64 மில்லியன் ரூபாவும், உட்கட்டுமான வசதிகள் அபிவிருத்தி செய்யும் வேலைத் திட்டத்தில் ஆறு வேலைக்கு 7.5 மில்லியன், கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தில் பன்னிரண்டு வேலைகளுக்கு ஆறு மில்லியன் ரூபாவும், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் ஐம்பது வீட்டுத் திட்டத்திற்கு 25 மில்லியன் ரூபாவும், மீள்குடியேற்ற வீடுகள் ஐந்துக்கு 3.9 மில்லியன் ரூபாவும், இந்திய வீட்டுத் திட்டம் ஐந்திற்கு 3.9 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், இவ்வேலைகளை இவ்வருடத்திற்குள் பூர்த்தி செய்யுமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் கோறளையப்பற்று பிரதேச செயலாளர் வி.வாசுதேவன், உதவித் திட்டப் பணிப்பாளர் எஸ்.சிவநேசராஜா, பிரதேச திணைக்கள அதிகாரிகள், பொலிஸ் உயர் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]