கலப்பு நீதிமன்றத்தை ஸ்தாபிக்க வேண்டுமாயின் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் – பிரதமர்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கலப்பு நீதிமன்றத்தை அமைப்பதற்கோ அல்லது சர்வதேச நீதிபதிகள், வழக்குத் தொடுணர்கள், விசாரணையாளர்களை போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறையில் உள்வாங்குவதற்கோ இலங்கை அரசு ஒருபோதும் இணங்கவில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அத்துடன், கலப்பு நீதிமன்றமொன்றை இலங்கையில் ஸ்தாபிக்க வேண்டுமாயின் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டியது அவசியமாகும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

இன்று நாடாளுமன்றில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

போர்க் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு தொடர்பில் சர்வதேச கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டதா என பொது எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் வலியுறுத்தியதாவது,

ஐ.நாவில் அமெரிக்காவால் கொண்டுவரப்பட்டு இலங்கை அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் 2015ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் முக்கிய பகுதிகளையும் ஒவ்வொன்றாக வாசித்துக்காண்பித்தார்.

வெளிநாட்டு நீதிபதிகளை அழைப்பதாக அதில் கூறப்பட்டிருக்கவில்லை என்றும், உள்ளகப் பொறிமுறைக்காக வெளிநாட்டவர்களின் ஆலோசனைகளைப் பெறுவதற்கே ஒத்துக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பிரதமர் கூறினார்.

ஐ.நா மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் செயித் ராட் அல் ஹுசைனின் அறிக்கையிலேயே சர்தேச நீதிபதிகள் மற்றும் கலப்பு நீதிமன்றம் போன்ற பரிந்துரைகள் காணப்பட்டுள்ளதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

முன்னாள் அரசாங்கத்தின் பிரதிநிதிகள் நியூயோர்க் நகருக்குச் சென்று வழக்குத் தொடர்வதற்கு சம்மதம் தெரிவித்துக்கொண்டனர். அதன் ஓரங்கமாகவே பீல்ட் மார்ஷலை இழுத்துச் சென்று கூண்டித் அடைத்தனர். பின்னர் அப்போதிருந்த வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் 2014ஆம் ஆண்டு ஜெனீவா சென்று, மூதூர், திருகோணமலை போன்ற விவகாரங்களுக்கு வழக்கு தொடர்வதாக என்று கூறியிருந்தார்.

ஆனால், எமது பிரதிநிதிக்ள அப்படி செய்யவில்லை. 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு நாங்கள் ஆதரவு அளிக்கின்றோம். ஆனால், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை ஆராய்ந்த பின்னரே அறிவிப்போம். சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றத்திற்கு ஒருபோதும் நாங்கள் இணங்கப்போதில்லை.

ஜனாதிபதியும் இதனைக் கூறியிருந்தார். சபையில் நான் இன்றும் இதனைக் கூறுகின்றேன். கடந்த ஆட்சியாளர்கள் சுமத்தியிருக்கும் கடன் அளவுப் பிரச்சினையையும், வழக்கு தொடர்வதாக கூறி ஏற்படுத்திய சுமையையும் தீர்க்கவேண்டிய கட்டாயத்தில் நாங்கள் உள்ளோம். ஸ்ரீலங்கா உள்ளக நீதிமன்றப் பொறிமுறையை அமைக்கும் அதிகாரம் அரசியலமைப்புக்கும், நாடாளுமன்றத்திற்குமே உள்ளது.

இவ்வாறு எல்லாம் செய்தவர்கள் இன்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடம் மன்னிப்புகோருவதற்குத் தயாரா? யார் வெள்ளைகொடி வழக்கு தொடர்ந்தது? யார் இந்த நிலைமையை உருவாக்கியது? போர் முடிவடைந்தப் பின்னர் மஹிந்தவும், ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகமும் இணைந்து கூட்டறிக்கையொன்றை வெளியிட்டனர். இதன்பிரகாரமே இந்த நடவடிக்கைகள் இடம்பெற்றுவருகின்றன.

போர்காலத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன. அவற்றுக்கு பொறுப்புக்கூற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுவருகின்றது. அதற்குரிய நடவடிக்கையை அரசாங்கம் செய்துவருகின்றது. இதற்காகத்தான் உள்ளகப் பொறிமுறை செய்யப்பட்டுள்ளது. எனவே, ஸ்ரீலங்காவின் அரசியலமைப்பின் படிதான் நடவடிக்கை இடம்பெறும்.

வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிப்பதற்கு இடமளிக்கப்படமாட்டாது. ஆனாலும் ஆலோசனைகளையும், தொழில்நுட்ப உதவிகளையும் பெறுவது குறித்து பரிசிலிக்கலாம். சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்க வேண்டுமானால் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். ஆனால் அந்த நிலைமைக்கு நாட்டை நாங்கள் இட்டுச்செல்ல மாட்டோம் என்றார்.