கருப்பென கேலிசெய்த குடும்பத்தினரை பலிவாங்கிய மருமகள்

கருப்பாக இருந்ததால் கேலி செய்த குடும்பத்தினரை பெண் ஒருவர் உணவில் விஷம் கலந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் காலாபூர் மாவட்டம் மஹத் கிராமத்தை சேர்ந்தவர் ஜோதி சுரேஷ் .

28 வயதான ஜோதிக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. ஜோதிக்கு அந்தளவுக்கு சமையல் செய்ய வராதாம்.

அதேபோல் பார்ப்பதற்கு கறுப்பாக இருந்துள்ளார். இதனால் மாமியார், நாத்தனாரின் பேச்சுக்கும் ஏச்சுக்கும் ஆளாகியுள்ளார்.

தொடர்ந்து குடும்பத்தினரின் ஏளனம் தொடர்ந்ததால் மனம் நொந்துபோயுள்ளார் ஜோதி. இதனால் மனமுடைந்த அவர் ஒருக்கட்டத்தில் தன்னை கேலி கிண்டல் செய்து ஒதுக்குபவர்களை பழிவாங்க வேண்டும் என எண்ணியுள்ளார்.

இதற்காக அவர்களை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார் ஜோதி. அதற்கான நேரம் எப்போது வரும் என்றும் காத்திருந்தார் ஜோதி.

அப்போதுதான் அவர் எதிர்ப்பார்த்து காத்திருந்த அந்த தருணம் வந்தது. மத்திய பிரதேச மாநிலம் காலாபூர் மாவட்டம் மஹத் கிராமத்தில் உறவினர் வீட்டின் கிரகபிரவேசம் நிகழ்ச்சி நடைபெற்றது.

கடந்த 18ஆம் தேதி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாமியார், நாத்தனார் உள்ளிட்டோரை பழிவாங்க உணவில் விஷத்தை கலந்தார் ஜோதி. இதனை விசேஷத்தில் பங்கேற்ற 120க்கும் மேற்பட்டோர் சாப்பிட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டனர்.

இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்களில் 7 முதல் 13 வயதுகுட்பட்ட 4 குழந்தைகளும் 53 வயது முதியவர் ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதைத்தொடர்ந்து நேற்று மாலை ஜோதி சுரேஷ் சர்வாஸ் கைது செய்யப்பட்டார். குடும்பத்தினர் அனைவரையும் கொல்ல உணவில் பூச்சி மருந்து கலந்ததை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

உணவு மாதிரியை போலீசார் தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஜோதி சுரேஷ் சர்வாஸ் மீது கொலை மற்றும் கொலை தொடர்புடைய மற்ற குற்றங்கள் என வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நிறத்தை வைத்து கிண்டல் செய்த குடும்பத்தினரை பழிவாங்க வீட்டு விசேஷத்திற்கு தயார் செய்யப்பட்ட உணவில் மருமகள் ஒருவர் பூச்சி மருந்து கலந்து 5 பேரை பலி கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.