கர்ப்பிணி பெண்ணை காப்பாற்றிய காவலர் மகளிர் தின விழாவில் கெளரவிப்பு!

கர்ப்பிணிப் பெண்ணை காப்பாற்றி பாதுகாப்பான பிரசவத்திற்கு உதவி புரிந்த இலங்கை காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் வட மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல் அமைச்சின் ஏற்பாட்டில் கடந்த 08.03.2018 அன்று கிளிநொச்சியில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

சுழிபுரம் பகுதியைச் சேரந்த கர்ப்பிணித் தாயொருவர் பிரசவத்திற்காக யாழ் போதனா வைத்திய சாலைக்கு சென்றுகொண்டிருந்த வேளை பயணித்த முச்சக்கர வண்டி இயந்திரக்கோளாறு ஏற்பட்டு இடைநடுவில் நின்றிருந்தது. இரவு வேளையென்பதால் பயணத்தை தொடரமுடியாது பரிதவித்து நின்றவர்களுக்கு அப்போது வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் கடமையில் இருந்த செனிவிரட்ண என்ற காவலர் உதவியிருந்தார்.

நான்கு மாதங்களுக்கு முன்னர் நடைபெற்றிருந்த இச்சம்பவத்தின் போது, வட்டுக்கோட்டை காவல்நிலையத்தில் கடமையில் இருந்த செனிவிரட்ண(அமில) என்ற காவலர் வாகனத்தில் இரவுநேர வீதிக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளையில் இவ்வாறு முச்சக்கரவண்டி பழுதடைந்து நின்றவர்களை கண்டுள்ளார். உடனடியாக தனது வாகனத்தில் ஏற்றி யாழ் போதனா வைத்திய சாலைக்கு கொண்டு சென்று சேர்ப்பிக்க உதவியிருந்தார். வைத்தியசாலைக்கு செல்லும் வழியிலேயே வாகனத்தில் குழந்தை பிறந்திருந்தது. குறித்த நேரத்தில் இவரின் உதவி கிடைத்தமையால் தாயும் சேயும் பாதுகாக்கப்பட்டிருந்தனர்.

தற்போது பொலநறுவ பகுதியில் கடமையாற்றிவரும் குறித்த காவலரின் மனிதநேய செயற்பாட்டை மதிப்பளிக்கும் வகையில் கௌரவ வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன் அவர்களது அறிவுறுத்தலின் பிரகாரம் அக்காவலர் வரவழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார்.

வட மாகாண மகளிர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் கடந்த 08.03.2018 அன்று கண்டி வீதி, கிளிநொச்சியில் அமைந்துள்ள கூட்டுறவு மண்டபத்தில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின விழாவின் போது இவரது மனிதநேய செயற்பாட்டை கௌரவிக்கும் முகமாக வட மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல் அமைச்சின் செயலாளர் திரு ஆர்.வரதீஸ்வரன் அவர்கள் பொன்னாடை அணிவிக்க, கௌரவ வட மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல் அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன் அவர்கள் நினைவுப் பரிசினை வழங்கி சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]