கர்ப்பிணி ஆசிரியைகளின் ஆடைச் சுற்றுநிருபம் இரத்து பிரதமர் உத்தரவு

ஆடைச் சுற்றுநிருபம்

கர்ப்பிணியாக இருக்கும் ஆசிரியைகளுக்கு மகளிர் மேலாடையான (கவுண்) உடையொன்றை அணிந்து கொள்வதற்காக வாய்ப்பை வழங்கும் வகையில் கல்வி அமைச்சு கடந்த வாரம் வெளியிட்ட சுற்றுநிருபத்தை உடனடியாக இரத்துச் செய்து விடுமாறு பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்ஹ உத்தரவிட்டுள்ளார்.

இந்த சுற்றுநிருபத்தை இரத்துச் செய்யுமாறு பிரதம மந்திரியிடம் ஆசிரியைகள் கேட்டக் கொண்டதற்கமைவாகவே பிரதமர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
கர்ப்பிணி ஆசிரியைகளின் நலன் கருதி அவர்கள் அணிந்து கொள்ளக் கூடிய சௌகரியமான உடை சம்பந்தமாக கல்வி அமைச்சினால் கடந்த வியாழக்கிழமை விஷே‪ட சுற்றுநிருபமொன்று வெளியிடப்பட்டிருந்தது.

ஆசிரியைகள் கர்ப்பமாக இருக்கும் காலத்தில் தமக்குச் சௌகரியமாக அணிந்து கொள்ளக் கூடிய விஷே‪ட ஆடையொன்றை அணிந்து கொள்வதற்கு சந்தர்ப்பம் வழங்கும் வகையில் இந்த விஷே‪ட சுற்றுநிருபத்தில் சிபார்சுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

ஆயினும், கல்வி அமைச்சின் சுற்றறிக்கையில் முன்வைக்கப்பட்டிருந்த வழிகாட்டல்களின் பிரகாரம் அதில், சிபார்சு செய்யப்பட்டுள்ள ஆடைகளை அணிவதில் கர்ப்பிணி ஆசிரியைகள் பலவாறான சிக்கல்களை எதிர்நோக்கக் கூடும் என்ற கரிசனையை பிரதமரைச் சந்தித்த ஆசிரியைகள் முன்வைத்திருந்தனர்.

கர்ப்பிணி ஆசிரியைகளின் ஆடைகள் சம்பந்தமாக ஆசிரியைகளின் இந்தக் கருத்துக்களைச் கரிசனைக்கு எடுத்துக் கொண்ட பிரதம மந்திரி, அதன் பிரகாரம் ஏற்கெனவே கடந்தவாரம் கல்வி அமைச்சினால் கர்ப்பிணி ஆசிரியைகளுக்காக வெளியிடப்பட்ட விஷே‪ட சுற்றுநிருபத்தை இரத்துச் செய்யுமாறு உத்தரவிட்டார்.

அத்துடன் கர்ப்பிணி ஆசிரியைகள் தங்களுக்கு சௌகரியத்தைத் தரக் கூடிய வகையில் தாம் விரும்பும் எந்தவொரு வசதியான ஆடையையும் அணியும் வகையில் அவர்களுக்கு அனுமதி வழங்கும் புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிடுமாறும் பிரதம மந்திரி கல்வி அமைச்சின் செயலாளரைப் பணித்துள்ளார்.

பிரதம மந்திரியின் உத்தரவின் பிரகாரம் கர்ப்பிணியாக இருக்கும் ஆசிரியைகளுக்கு சௌகரியமான மகளிர் மேலாடையை அணிந்து கொள்வதற்காக வாய்ப்பை வழங்கும் வகையில் புதிய சுற்றறிக்கை வெகு விரைவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]