கமர் நிசாம்டீனை சிக்க வைத்த கிரிக்கெட் வீரரின் சகோதரர் அவுஸ்திரேலிய பொலிஸாரால் கைது

போலியான தீவிரவாத குற்றச்சாட்டுக்களை முன்வைத்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் உஸ்மன் கவாஜாவின் சகோதரர் அர்சலன் கவாஜாவை அவுஸ்திரேலிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இலங்கை பிரஜை கமர் நிசாம்டீன் மீது பயங்கரவாத தாக்குதல்களை மேற்கொள்ள முயற்சிப்பதாக போலி ஆவணங்களை தயாரித்து குற்றச்சாட்டுக்களை முன்வைத்தமை தொடர்பிலேயே குறித்த நபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.​

போலியான ஆவணங்களை தயாரித்து, நீதியை திசைதிருப்ப முயன்ற காரணத்தினால் பரமட்டா நீதிபதி சந்தேகநபரிற்கு பிணை வழங்க மறுத்துள்ளார்.

அத்துடன் இந்த சம்பவம் நன்கு திட்டமிடப்பட்ட ஒரு விடயம் என பொலிஸ் உதவி ஆணையாளர் மைக் வில்லிங் தெரிவித்துள்ளார்.

விசாரணைகள் மூலம் அவுஸ்திரேலிய சமூகத்திற்கு எந்தவித ஆபத்து இருப்பதாக தெரியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் இலங்கை பிரஜை நிசாம்டீன் திட்டமிட்ட முறையில் சிக்கவைக்கப்பட்டு கைது செய்யப்பட்டமை குறித்து அவர் தனது கவலை வெளியிட்டுள்ளார்.

தனிப்பட்ட கோபங்களின் காரணமாகவே கமர் நிசாம்டீனை அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரரின் சகோதரர் சிக்க வைத்துள்ளதாகவும், பெண் விவகாரமே இதற்கு காரணமா என்பது குறித்து ஆராய்வதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிட்னி பல்கலைக்கழகத்திலிருந்து எடுக்கப்பட்ட குறிப்பு புத்தகத்தின் அடிப்படையில், அவுஸ்திரேலிய அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய இடங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்டார் என கமர் நிசாம்டீன் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

அந்த குறிப்பு புத்தகத்திலுள்ள கையெழுத்துக்கள் நிசாம்டீன் உடையவை அல்ல என்று நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அவர் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]