கனடா தொடர்ந்தும் ஈழத் தமிழர்களின் நீதிக்காக தோளோடு தோள் நின்று பலம்சேர்க்க வேண்டும் – அனந்தி சசிதரன்

அனந்தி சசிதரன்

கனடா தொடர்ந்தும் ஈழத் தமிழர்களின் நீதிக்கான முன்னெடுப்புகளில் தோளோடு தோள் நின்று பலம்சேர்க்க வேண்டுகின்றோம்! வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன்!

ஜெனிவா அமர்வில் இலங்கை அரசிற்கு அழுத்தம் கொடுக்க இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்ரின்ட் ரூடோ அவர்கள் உறுதி தெரிவித்துள்ளமைக்கு நெஞ்சார்ந்த நன்றிகளையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்வதாக வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையால் இலங்கை குறித்து எடுக்கப்படும் தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசிற்கு கடுமையான அழுத்தம் கொடுக்கப்படும் என்று, கனடா பிரதமர் ஜஸ்ரின்ட் ரூடோ அவர்கள் உறுதிபடத் தெரிவித்துள்ளது குறித்து அமைச்சர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்..

இலங்கை அரச படைகளால் தமிழ் மக்கள் மீது நேரடியாகவும் மறைமுகமாகவும் நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கான நீதி தொடர்ந்தும் தாமதப்படுத்தப்பட்டு வருவதற்கு, இக் குற்றத்துடன் நேரடியாகத் தொடர்புடைய இலங்கை அரசாங்கம் தனது பொறுப்புக்கூறலை நிறைவேற்றாமையே காரணமாகும்.

போரிற்கு பின்னர் தமிழர்களின் இனப்பிரச்சினைக்கு உரிய தீர்வினை வழங்குவோம் என்று முன்னைய இலங்கை ஆட்சியாளர்களால் வழங்கப்பட்ட உத்தரவாதத்தின் அடிப்படையில் போரிற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உலக நாடுகள் தமது ஆதரவினை வழங்கியிருந்தன. ஆனால், அதன் பின்னர் நடைபெற்ற, நடைபெற்று வரும் இனப்படுகொலைக் குற்றங்களுக்கான பொறுப்புக் கூறலை செய்வதற்கான அழுத்தங்களை இலங்கை அரசாங்கத்திற்கு வழங்காது மௌனமாக இருப்பதானது பாதிக்கப்பட்ட தமிழர்களிடையே பெரும் ஏமாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் வலிந்து ஏற்படுத்தப்பட்ட ஆட்சி மாற்றத்தின் மூலமாக தத்தமது அரசியல், பொருளாதார நலன்களை பேணிப்பாதுகாப்பத்தில் அதீத கவனம் செலுத்திவரும் பிராந்திய, உலக நாடுகள் பாதிப்பிற்குள்ளாகிய மக்கள் சமூகமாகிய தமிழர்கள் விடயத்தில் கண்டுகொள்ளது இருப்பதானது உலக நீதியின் மீதான நம்பக்தன்மையினை தகர்தெறிவதாக அமைந்துள்ளது.

இவ்வாறான கையறு நிலையில் நின்று கொண்டு ஈழத்தமிழர்களாகிய நாம் நீதிக்கான முன்னெடுப்புகளை அறத்தின் மீதான அசைக்க முடியாத நம்பிக்கையுடன் மேற்கொண்டு வரும் வேளையில் கனடா பிரதமரின் இவ் அறிவிப்பானது பெரும் உத்வேகத்தை தந்துள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் போரினால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோரின் நம்பிக்கையைக் கொண்டிருக்கக்கூடிய பொறுப்புக் கூறல் பொறிமுறை தேவையென்ற விடயத்தில் தனிப்பட்ட முறையில் தாம் உறுதியாக இருப்பதாக கனடா பிரதமர் கூறியிருப்பதன் மூலம் இவ்விடயத்தில் தனது உள்ளார்ந்தமான ஈடுபாட்டினை வெளிப்படுத்தியுள்ளார்.

இதே உறுதியுடன், ஈழத் தமிழர்களின் நீதிக்கான முன்னெடுப்புகளில் தோளோடு தோள் நின்று கனடா அரசாங்கம் தொடர்ந்தும் பலம் சேர்க்க வேண்டும் என்று உலகத் தமிழர்களின் சார்பில் கேட்டுக் கொள்வதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அனந்தி சசிதரன்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]