கத்திரிக்காய் திருடியவருக்கு 9வருடத்திற்கு பின்பு விடுதலை!!

இத்தாலியின் Lecce பகுதியில் அமைந்துள்ள தனியார் தோட்டத்தில் இருந்து ஒரு சில கத்திரிக்காய்களை திருடிய நபரை, 9 ஆண்டுகளுக்கு பின்னர் நீதிமன்றம் விடுவித்துள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டு, வறுமை காரணமாக குறித்த நபர் கத்திரிக்காய்களை தனியார் தோட்டம் ஒன்றிலிருந்து திருடியுள்ளார்.

குறித்த வழக்கு விசாரணைக்காக இத்தாலி அரசு இதுவரை 8,000 யூரோ செலவிட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது.

பொலிஸார் அவரை கைது செய்த போது, தனது பிள்ளைகளின் பசியை போக்கவே தாம் காய்களை திருடியதாக தெரிவித்திருந்தார்.

குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு நீதிமன்றம் 5 மாத சிறை தண்டனையும் 500 யூரோ அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
பின்னர் மேல்முறையீடு காரணமாக 4 மாத சிறை தண்டனையும் 120 யூரோ அபராதமும் என தீர்ப்பு வழங்கப்பட்டது.

எனினும் அதையும் ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறிய குறித்த நபரின் வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தை நாடினர்.

குறித்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், குற்றஞ்சாட்டப்பட்ட நபரின் வறுமை நிலையை கருத்தில் கொண்டதுடன், திருடிய நபர் காய்களை பெருந்தொகைக்கு விற்பனை செய்யவில்லை என்றும் தமது இயலாமையால் பிள்ளைகளின் பசியை தாங்க முடியாமல் திருடியுள்ளார் என்றும் கூறி குறித்த வழக்கை தள்ளுபடி செய்து 9 ஆண்டுகளுக்கு பின்னர் அந்த நபரை வழக்கில் இருந்து விடுவித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]