கண்ணி வெடிகளை அகற்ற பிரித்தானியாவின் நிதியுதவி தொடர்கிறது

வடக்கு பகுதியில் கண்ணி வெடிகளை அகற்றும் பணிகளுக்காக பிரித்தானியாவால் 1.2 பில்லியன் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2010ஆம் ஆண்டு முதல் தற்போது வரை இந்த நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

பிரித்தானிய வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.

அத்துடன், கண்ணிவெடிகளை அகற்றுவது தொடர்பில் இலங்கை பாரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, 2019 – 2020 ஆம் ஆண்டுகளில் இலங்கையில் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளுக்காக இலங்கைக்கு நிதியுதவி அளிப்பதற்கு பிரித்தானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கண்ணிவெடிகள் தொடர்பில் சர்வதேச ரீதியில் காணப்படும் பல ஒப்பந்தங்களில் இலங்கை கடந்த காலங்களில் கைச்சாத்திட்டது.

இதனையடுத்து, கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கை தொடர்பில் சர்வதேச நாடுகள் அவதானம் செலுத்தியிருந்தன.

மேலும், கடந்த வருடம் சுவிட்ஸர்லாந்தில் இடம்பெற்ற மாநாட்டில், 2020ஆம் ஆண்டில் இலங்கை கண்ணிவெடி அற்ற நாடாக மாற்றமடையும் என பெயரிடப்பட்டிருந்தது.

எனினும், கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்காக வந்திருந்த சர்வதேச அமைப்புகள் பல நாட்டை விட்டு வெளியேறியுள்ளமை காரணமாக, கண்ணிவெடி அகற்றும் பணிகள் தாமதமடைந்துள்ளன.

அதனையடுத்து, லங்கை கண்ணிவெடி அற்ற நாடாக மாற்றமடையும் வருடமாக 2025ஆம் ஆண்டு என அந்த மாநாட்டில் அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]