கண்டியில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊடரங்கு சட்டம் நீக்கம்

கண்டி நிர்வாக மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று மாலை முதல் அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று காலை 6.00 மணியுடன் விலக்கி கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் குழப்பம் ஏற்பட்ட தெல்தெனிய மற்றும் திகன பகுதியில் தொடர்ந்தும் விஷேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளதாக அவர் கூறினார்.

நேற்று முன்தினம் மற்றும் நேற்று தெல்தெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற அமைதியற்ற சம்பவங்களைக் கருத்தில் கொண்டு இந்த ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்பட்டது.

கடந்த மாதம் 22ஆம் திகதி தெல்தெனிய பிரதேசத்தில் லொறி சாரதி ஒருவர் முச்சக்கரவண்டியில் சென்ற சிலரால் தாக்கப்பட்டார். அவர் தாக்கப்படும் காட்சி, அருகில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் சீ.சீ.டி.வி கமெராக்களில் பதிவாகி இருந்தன.

சம்பவத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தெல்தெனிய பகுதியை சேர்ந்த 46 வயதுடைய இந்நபர் மறுநாள் மரணமானார்.

அவரது மரணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேச மக்கள் நேற்று முன்தினம் முதல் தெல்தெனிய நகரம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் அமைதியற்ற வகையில் செயற்பட்டுள்ளனர்.

இதன்போது அவர்கள் நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள் சிலவற்றின்மீது தாக்குதல் நடத்தியுள்ளதுடன், அவற்றுக்கு தீ வைத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் இதுவரையில் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும் நேற்று பிற்பகல் சிலத்தரப்பினர் திகன மற்றும் தெல்தெனிய பகுதிகளில் மீண்டும் அமைதியைக் குழப்பும் வகையில் செயற்பட்டுள்ள நிலையில் அவர்களை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் கண்ணீர்ப்புகைப் பிரயோகத்தை மேற்கொண்டனர்.

இதேவேளை, கண்டி – திகன பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பக்கசார்பற்ற மற்றும் சுயாதீனமான விசாரணையை நடத்துமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளார்.

இது தொடர்பான ஆலோசனை பாதுகாப்பு பிரிவுகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் பிரதேசத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக விசேட செயற்திட்டங்களை முன்னெடுக்குமாறும் ஜனாதிபதி, பொலிஸார் மற்றும் இராணுவத்திற்கு ஆலோனை வழங்கியுள்ளார்.

இதேவேளை, கண்டி நிர்வாக மாவட்டத்துக்கு உட்பட்ட சகல அரச பாடசாலைகளுக்கும் இன்றையதினம் விடுமுறை வழங்குமாறு கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் பணித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]