கணவர் வடிவில் கண்களை பெற்றேன். வைக்கொம் விஜயலட்சுமி உருக்கம்!

கணவர் வடிவில் கண்களை பெற்றேன்.  வைக்கொம்  விஜயலட்சுமி உருக்கம்!

பிரபல பாடகி வைக்கொம்   விஜயலட்சுமி பிறவியிலேயே கண்பார்வை அற்றவர். இருப்பினும் தனது இனிமையான குரலின் மூலம் தமிழ், மலையாள திரைப்படங்களில் பாடி புகழ் பெற்றார். குக்கூ, பட்டதாரி’, ‘என்னமோ ஏதோ, வெள்ளைக்காரத் துரை, ரோமியோ ஜூலியட், வீர சிவாஜி உள்பட பல திரைப்படங்களில்  வைக்கொம் விஜயலட்சுமி பாடிய பல பாடல்கள்  ஹிட்டாகியுள்ளது. குறிப்பாக் பாகுபலி’ படத்தில் அவர் பாடிய ‘யாரு இவன் யாரு இவன்’  பாடலை பாராட்டாதவர்களே இருக்க முடியாது.

இந்நிலையில் 35 வயதான விஜயலட்சுமிக்கு கடந்த மாதம் 13ஆம் திகதி திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. வரும் மார்ச் மாதம் 29ஆம் திகதி திருமணமும் நடைபெறவுள்ளது. கேரளாவை சேர்ந்த இசையமைப்பாளர் சந்தோஷ் தான் மாப்பிள்ளை

இந்நிலையில் தனது வருங்கால கணவர் சந்தோஷ் குறித்து வைக்கொம்  விஜயலட்சுமி கூறியபோது, ”எனது மனதில் ஒரு விஷயம் எப்போதுமே இருந்து வந்தது. ‘என்னைப் போன்ற கண் பார்வையற்ற ஒருவரை யாராவது திருமணம் செய்து கொள்வார்களா?’ என்ற எண்ணம்தான் அது. இப்போது ஒரு மனிதர்  வந்திருக்கிறார். எனது அத்தனை பலவீனங்களையும் அறிந்து கொண்ட ஒருவர் என்னை திருமணம் செய்து கொள்ள முனவந்துள்ளார். எனக்கு திருமணம் நடைபெற வேண்டுமென எனது பெற்றோர்  கோயிலில் வேண்டாத நாளில்லை. இப்போது அது நிறைவேறியிருக்கிறது. கண் பார்வையற்ற எனக்கு இப்போது கணவர் வடிவில் கடவுள் கண்களை அளித்துள்ளான்” என நெகிழ்வுடன் கூறியிருக்கிறார்.

விஜயலட்சுமியை திருமணம் செய்யவுள்ள இசையமைப்பாளர் சந்தோஷ் தனது வருங்கால மனைவி குறித்து கூறியபோது, ”விஜயலட்சுமியை மனைவியை பெற தவம் செய்திருக்க வேண்டும். எனது 6 வயதில் தந்தையை இழந்தேன். எனது தாயையும் இழந்தேன். தனிமையின் வலி எனக்குத் தெரியும். கடவுள் அருள், வலி, இசை இந்த மூன்றும்தான் எங்களை இணைத்திருக்க வேண்டும்’ என்று கூறினார்.