கட்டட நிர்மாணிப்பு குறித்து அறிவுறுத்தும் மட்டக்களப்பு – ஏறாவூர் நகர சபை!!

மட்டக்களப்பு – ஏறாவூர் நகர சபைப் பிரிவில் கட்டிட நிர்மாணங்களின்போது ஏற்படுகின்ற பிரச்சினைகளை நகர அபிவிருத்தி அதிகார சபைச் சட்ட வரம்புகளுக்கு உட்பட்டு நெகிழ்வுத் தன்மையோடு அணுகுமாறு அதிகாரிகளையும் கட்டிட நிர்மாணங்களை மேற்கொள்வோரையும், கேட்டுக் கொள்ளும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஏறாவூர் நகர சபைத் தலைவர் ஐ. அப்துல் வாஸித் தெரிவித்தார்.

ஏறாவூர் நகர சபையின் விஷேட சபை அமர்வு செவ்வாய்க்கிழமை 01.05.2018 இடம்பெற்ற கூட்டத்தில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சகல கட்சிகள், மற்றும் சுயேச்சைக் குழு ஆகியவற்றின் சார்பாக நகர சபையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் முஸ்லிம் ஆண் பெண் உறுப்பினர்கள் அனைவரின் பிரசன்னத்துடன் இந்த விஷேட சபை அமர்வு இடம்பெற்றது.

ஏறாவூர் நகரை ஊடறுத்துச் செல்லும் கொழும்பு – மட்டக்களப்பு நெடுஞ்சாலை விஸ்தரிப்பு, நகர அபிவிருத்தியும், அழகுபடுத்தலும், நகர சபைப் பிரிவில் தொற்றும் மற்றும் தொற்றா நோய்கள் பற்றிய அவதானம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் இந்த விஷேட சபை அமர்வில் கலந்தாலேசிக்கப்பட்டு தீர்மானங்கள் எட்டப்பட்டதாக நகரசபைத் தலைவர் இறம்ழான் அப்துல் வாஸித் தெரிவித்தார்.

ஏறாவூர் நகர சபைக்கு உட்பட்ட வாவிக்கரையின் ஒரு புறத்தில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை உடனடியாக அகற்றுதல், இருளடைந்ந வீதிகளுக்கு தெரு மின்விளக்குகளைப் பொருத்துதல், குறுக்கு வீதிகளின் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தல், தொற்றும் மற்றும் தொற்றா நோய்கள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்வுகளை நடாத்துதல்

உள்ளிட்ட இன்னும் பல விடயங்கள் ஆராயப்பட்டு தீர்மானங்கள் எட்டப்பட்டன.