கட்சியின் தலைவரும், நிறைவேற்றுக் குழுவும் முழுமையான ஆதரவு வழங்கினால் மாத்திரமே பிரதமர் பதவிவை ஏற்றுக்கொள்வேன்- சஜித் பிறேமதாச தெரிவிப்பு

ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும், கட்சியின் நிறைவேற்றுக் குழுவும் அங்கீகரித்தால் மாத்திரமே எந்தவொரு பதவியையும் தான் ஏற்றுக்கொள்வேன் என ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவர் சஜித் பிறேமதாச அறிவித்திருக்கின்றார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை ஓரம் கட்டிவிட்டு தலைமைப் பதவியை கைப்பற்ற சஜித் தரப்பினர் மீண்டும் சதி செய்து வருவதாக மஹிந்த – மைத்ரி தரப்பிலிருந்து முன்வைக்கப்பட்டு வரும் பிரசாரங்களையும் சஜித் பிறேமதாச இன்றைய தினம் கண்டியில் நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் நிராகரித்தார்.

கட்சியில் தான் தற்போது வகிக்கும் பதவிகளுக்கு மேலதிகமான மற்றுமொரு படியை முன்னோக்கி வைப்பதற்கு தான் தயார் என்றும், அதற்கு கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும்,நிறைவேற்றுக் குழுவும் முழுமையான அனுமதியும் ஆசீர்வாதமும் வழங்கினால் மாத்திரமே அதனை தான் செய்வதாகவும் சஜித் குறிப்பிட்டிருக்கின்றார்.

அதேவேளை சிறிலங்கா நாடாளுமன்றில் தெரிவுக்குழு உறுப்பினர்களின் தெரிவு தொடர்பான வாக்கெடுப்பு நேற்றைய தினம் 121 வாக்குகளால் நிறைவேற்றப்பட்ட நிலையில் அதனையும் மஹிந்த – மைத்ரி தரப்பு ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், சபாநாயகர் பக்கச் சார்பாக நடந்துகொள்வதாக குற்றம்சாட்டியும் இருந்தனர்.

இந்தக் குற்றச்சாட்டுக்களை நிராகரித்த சஜித் பிறேமதாச, “ சபாநாயகரை ஏற்றுக்கொள்ளமாட்டார்களாம், நம்பிக்கையில்லாத் தீர்மானங்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்களாம். அப்படியென்றால் முடிந்தால் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை நாடாளுமன்றத்திற்கு கொண்டுவாருங்கள். அதனை மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் தோற்கடித்துக் காட்டுகின்றோம்” என்று சஜித் மைத்ரி – மஹிந்த தரப்பிற்கு சவால் விடுத்தார்.

சபாநாயகர் கரு ஜயசூரியவை மைத்ரி – மஹிந்த தரப்பு இலக்கு வைத்துள்ளதற்கான காரணத்தையும் சஜித் தெளிவுபடுத்தினார்.

“ஏன் சபாநாயகரை மஹிந்த – மைத்ரி கூட்டணி எதிர்க்கின்றது என்று தெரியுமா? 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 62 இலட்சம் மக்கள் வாக்களித்து வழங்கிய மக்கள் ஆணையை சபாநாயகர் காட்டிக்கொடுக்க விடாது தொடர்ச்சியாக பாதுகாத்து வருகின்றார். அதேவேளை ஜனநாயக விரோத செயல்களுக்கு எதிராக தொடர்ச்சியாக அவர் குரல்கொடுத்து வருவதுடன்,நாடாளுமன்றத்தை முடக்க எடுத்த நடவடிக்கைகளையும் தோற்கடித்து நாடாளுமன்றத்தை கூட்டினார்.

இதனால் உலக ஜனநாயக வரலாற்றில் எமது சபாநாயகர் கரு ஜயசூரியவின் பெயர் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும். சர்வதேச அரங்கிலும் அவர் பெரிதும் மதிக்கப்படும் ஜனநாயக பாதுகாவலராக மாறியிருக்கின்றார். இதனாலேயே ஜனநாயகத்தையும், நாட்டின் அதி உயர் பீடமான நாடாளுமன்றத்தையும் பாதுகாப்பதற்காக தைரியமாக முன்னிற்கும் சபாநாயகரை இழிவுபடுத்தி, அவரது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் முயற்சிகளில் மஹிந்த – மைத்ரி தரப்பு ஈடுபட்டுள்ளதாக சஜித் குற்றம்சாட்டியுள்ளார்.

இதற்காகவே தமது விசுவாசிகளைக் கொண்டு சபாநாயகருக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருவதுடன், சபாநாயகரின் கொடும்பாவிகளையும் எரிக்கின்றனர் என்றும் சஜித் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக நேருக்கு நேர் நின்று போராட தைரியமில்லாது ஓடி ஒழிந்துகொண்ட மஹிந்த – மைத்ரி கூட்டணி இன்று நாடாளுமன்றத்தில் அதன் சம்பிராதாயங்களையும், ஜனநாயகத்தை மதித்து எம்முடன் மோத முடியாது தடுமாறுவதாகவும் சஜித் தெரிவித்தள்ளார்.

இதனாலேயே நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியுடன் கூட்டணியொன்றை அமைத்துக்கொண்டு அந்த அதிகாரத்தின் பாதுகாப்புடன் நாடாளுமன்றிலும் அதற்கு வெளியிலும் சட்டவிரோத நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியிருப்பதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவர் குற்றம்சாட்டியுள்ளார்.

மஹிந்த – மைத்ரி கூட்டணியின் ஜனநாயக விரோத செயல்களை தொடர்ந்தும் வேடிக்கை பார்க்கப் போகின்றார்களா? என்றும் மக்களிடம் கேள்வி எழுப்பிய சஜித் பிறேமதாச, சண்டியர்களைப் போல் நாடாளுமன்றில் நடந்து கொண்டால் தாங்கள் பெரிய வீரர்களாக அடையாளப்படுத்த இந்த கும்பல் முயற்சித்து வருவதாகவும் சாடியுள்ளார்.

நாம் கடந்த மூன்றரை வருடங்களாக என்ன செய்தோம் என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர். நாட்டில் சுதந்திரத்தை நாம் நிலைநாட்டவில்லையா?. ஊடக சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலை நாட்டவில்லையா? குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டவில்லையா?

ஆனால் ஒக்டோபர் 26 ஆம் திகதி இந்த அனைத்து நடவடிக்கைகளும் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. கொடுங்கோல் ஆட்சி மீண்டும் தலைதூக்கியுள்ளது. அது மாத்திரமன்றி நாட்டு மக்களுக்காக நாம் மேற்கொண்ட அனைத்து மக்கள் நலன் சார்ந்த அனைத்துத் திட்டங்களையும் இந்த கள்ளக் கூட்டம் முடக்கியுள்ளது.

குறிப்பாக உதா கம்மான என்ற வீடமைப்புத் திட்டத்தை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நிறுத்திவைத்துள்ளார்.

எமது எதிராளிகள் நாம் தேர்தலுக்கு அஞ்சுவதாக கூறி வருகின்றனர். அன்று 2015 ஆம் ஆண்டு அரச பயங்கரவாதம், அரச அடக்கு முறைகள் தீவிரமடைந்திருந்த காலப்பகுதியான 2015 ஆம் ஆண்டில் அதாவது எவராலும் தோற்கடிக்க முடியாது என்று கூறியவர்களையே நாம் தோற்கடித்தோம்.

அதனால் நாட்டு மக்கள் அனைவரும் தயாராக வேண்டும். அடுத்தவாரம் மாகாண சபைத் தேர்தலையும், ஜனாதிபதித் தேர்தலையும், அதேபோல் பொதுத் தேர்தலையும் நாம் வெற்றி பெறுவோம். இது நிச்சயம். ஆனால் இதனை நாட்டு மக்களான உங்களுடன் இணைந்து மேற்கொள்ள வேண்டும். அதன் மூலம் மாத்திரமே இந்த சர்வாதிகார வெறியர்களை முழுமையாக தோற்கடிக்க முடியும் என்று நாம் நம்புகின்றோம்.

ஒக்டோபர் 26 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட இந்த சதியை அடுத்து நான் மிகவும் வேதனையில் இருக்கின்றேன். அதாவது எமது பிரதமர் என்னை நம்பி வீடமைப்பு அமைச்சுப் பதவியை வழங்கியது முதல் நாட்டு மக்கள் அனைவருக்கும் வீடுகளை அமைத்துக் கொடுக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தினோம்.

ஆனால் அந்தத் திட்டம் ஒடோபர் 26 ஆம் திகதியுடன் முடக்கப்பட்டுள்ளது. அது மிக வேதணைக்குரிய விடையமாகும். ஆனால் விரைவில் ஆட்சியை கைப்பற்றி நாம் முன்னர் முன்னெடுத்ததை விட மேலும் பல மடங்கு அதிகமாக நாம் இந்த வீடமைப்புத் திட்டத்தை முன்னெடுத்து நாட்டிலுள்ள அனைவருக்கும் வீடுகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்போம் என்று சஜித் பிறேமதாச சூளுரைத்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]