கட்சித்தலைவர்கள் கூட்டத்திலிருந்து இடைநடுவில் எழுந்து வந்த மனோவின் விளக்கம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்திலிருந்து தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் இடை நடுவில் வெளியேறினார்.

இச்சமயத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சமரசப்படுத்துவதற்கு முயற்சிகளை எடுத்த போதும் அது கைகூடியிருக்கவில்லை.

இவ்விடயம் தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் தெரிவிக்கையில்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று திங்கட்கிழமை இரவு 9.30க்கு கட்சித்தலைவர் கூட்டம் ஜனாதிபதி இல்லத்தில் நடைபெற்றது.

உள்ளூராட்சி சபை தேர்தல்கள், மாகாணசபை தேர்தல்கள், அரசியலமைப்பு ஆகிய விடயங்கள் தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில், உள்ளூராட்சி சபை தேர்தல் பற்றி பேசும் போது, தேர்தலுக்கு முன் புதிய உள்ளூராட்சி சபைகள் அமைக்க முடியாது என்று பிரதமர் ரணில் கூறினார்.

நாடு முழுக்க புதிய பிரதேச சபைகள் அமைக்க வேண்டி கோரிக்கைகள் வந்துள்ளதால், அதை இப்போது செய்ய முடியாது என அவர் காரணம் கூறினார்.

அப்போது இடைமறித்த நான், நாட்டின் ஏனைய இடங்களில் புதிய சபைகளை பிறகு உருவாக்கலாம். ஆனால், நுவரெலியா மாவட்டத்துக்கு விசேட கரிசனை வேண்டும். அங்கே ஒவ்வொன்றும் இரண்டு லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வாழும் இரண்டு சபைகள் இப்போது உள்ளன. ஒன்று, நுவரேலியா பிரதேச சபை, அடுத்தது, அம்பகமுவ பிரதேச சபை.

நாட்டின் ஏனைய இடங்களில் பத்தாயிரம் பேருக்கு ஒரு பிரதேச சபை இருக்கும் போது, நுவரேலியா மாவட்டத்தில், மட்டும் இப்படி இரண்டு லட்சம் பேருக்கு ஒரு சபை என்ற கணக்கில் நான்கு லட்சம் பேருக்கு இரண்டு சபைகள் இருப்பது மாபெரும் அநீதி. இது கடந்த முப்பது வருட காலமாக மலையக தமிழருக்கு மாத்திரம் இந்நாட்டில் இழக்கப்பட்டு வரும் அநீதி.

ஏனைய சபைகளை பிறகு பார்த்துக்கொள்வோம். நுவரேலியாவில் மட்டும் புதிய சபைகளை தேர்தலுக்கு முன் அமைத்து தருவோம் என எனக்கு நீங்கள் உறுதி அளித்தீர்கள். அதை இப்போது செய்யுங்கள்” என பிரதமரிடம் நேரடியாக கூறினேன்.

இது தொடர்பில் பிரதமரின் உறுதிமொழியை நம்பி, நான் தமிழ் மக்களுக்கு உறுதியளித்துள்ளேன். அடுத்த தேர்தல் இன்னும் ஐந்து வருடங்களுக்கு பிறகு நடைபெறும். அதுவரை எங்கள் மக்களுக்கு மட்டும் இந்நாட்டில் இந்த அநீதி இந்த நல்லாட்சி என்ற ஆட்சியில் நீடிக்க முடியாது என்பது என் நிலைப்பாடு.

என் நிலைப்பாட்டை அங்கு கூட்டத்தில் அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த ஆதரித்தார். எனினும் இதுபற்றி முடிவெடுத்து, மலையக தமிழருக்கு மட்டும் இழைக்கப்பட்டுள்ள இந்த அநீதியை துடைக்க அந்த கூட்டத்தில் எவருக்கும் மனம் இல்லாததை உணர்ந்த பிறகும் அங்கே அமர்ந்து, தலையாட்டிக்கொண்டு இருக்க என்னால் முடியவில்லை. உடனடியாக இடைநடுவில் எழுந்து வந்து விட்டேன்.

கூட்டத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன், அமைச்சர்கள் லக்ஷ்மன் கிரியல்ல, மங்கள சமரவீர, மலிக் சமரவிக்கிரம, நிமல் சிறிபால டி சில்வா, ரவுப் ஹக்கீம், திகாம்பரம், கபீர் ஹசீம், ராஜித, சம்பிக ரணவக்க, சுசில் பிரேமஜயந்த, சரத் அமுனுகம, அனுர பிரியதர்ஷன யாபா, டிலன் பெரேரா மற்றும் சுமந்திரன் எம்பி. ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]