கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு மன்னிப்பு வழங்கவேண்டும் – டக்ளஸ் தேவானந்தா!

களுத்துறைச் சிறைச்சாலையில் தன்மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தின்போது குற்றவாளிகளாக இனங்காணப்பட்டு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு மன்னிப்பு வழங்கவேண்டும் என்பதே தமது நிலைப்பாடாகும் என்று ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இதுவிடயம் தொடர்பாக தாம் நீதிமன்ற விசாரணைகளின்போது இனங்காணப்பட்ட குறித்த குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்கவேண்டும் என்ற தனது நிலைப்பாட்டை முன்னர் வெளிப்படையாக தெரிவித்திருந்ததாகவும் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த தாக்குதலின்போது சந்தேகத்தில் இனங்காணப்பட்டிருந்த 15 பேரில் முன்னாள் புலிகள் அமைப்பின் உறுப்பினர் எமில்காந்தன் உள்ளிட்ட 9 பேரை நீதிமன்றம் விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே டக்ளஸ் தேவானந்தாவை களுத்துறை சிறைச்சாலையினுள் கூரிய அயுதங்களால் தாக்கி படுகாயங்களுக்குள்ளாக்கிய சம்பவத்தில் குற்றவாளிகளாக இனங்கபாணப்பட்ட 6 குற்றவாளிகளுக்கு பத்தரை வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பியசேன கமகே இன்றையதினம்(30) தீர்ப்பளித்துள்ளார்.

களுத்துறைச் சிறைச்சாலையில் 1998 ஆம் ஆண்டு தமது விடுதலையை வலியுறுத்தி தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டுவந்த நிலையில் அப்போது அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவானந்தா குறித்த சிறைச்சாலைக்குச் சென்று கைதிகளை பார்வையிட்டு கலந்துரையாடச் சென்றிருந்த சமயமே கைதிகளினால் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]