கடுமையான போக்குவரத்துக் குற்றங்களுக்கான இரண்டு இலட்சம் ரூபா வரை அபராதம்

கடுமையான போக்குவரத்துக் குற்றங்களுக்கான அபராதத் தொகையை இரண்டு இலட்ச ரூபா வரையில் அதிகரிப்பதற்கான பிரேரணையொன்றை போக்குவரத்து அமைச்சு அமைச்சரவைக்கு சமர்ப்பித்துள்ளது.

விபத்துகளுக்கான பிரதான காரணங்கள் பற்றி மேற்கொள்ளப்பட்ட தீவிர ஆய்வுகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக போக்குவரத்து அமைச்சின் செயலாளர் நிஹால் சோமவீர தெரிவித்துள்ளார்.

மதுபோதையில் வாகனம் செலுத்தி விபத்துகளை ஏற்படுத்துபவர்களுக்கும் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமல் வாகனங்களை செலுத்தும் இளம்பராயத்தினருக்கும் இந்த உச்சபட்ச அபராதம் விதிக்கப்படும் எனவும், அடுத்தடுத்து மூன்று மோசமான விபத்துகளை ஏற்படுத்தும் சாரதிகளுக்கு இந்த அபராதத்துக்கு மேலதிகமாக அவர்களது ஆயுட்காலம் முழுக்க சாரதி அனுமதிப்பத்திரங்களுக்குத் தடைவிதிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

நிதி அமைச்சு, போக்குவரத்து அமைச்சு, மோட்டார் போக்குவரத்து திணைக்களம், பொலிஸ் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியவற்றைச் சேர்ந்த ஐவர் அடங்கிய குழுவொன்றால் இந்த அபராதங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. அத்துடன், தற்போது 500 மற்றும் 1000 ரூபாவாகவுள்ள அபராதங்களும், 2 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளன எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே போக்குவரத்து அமைச்சர் முன்வைத்த 25 ஆயிரம் ரூபா அபராதம் பல்வேறு தரப்புகளிலிருந்தும் எழுந்த கடுமையான எதிர்ப்பையடுத்து கைவிடப்பட்ட நிலையில், இந்தப் புதிய அபராதம் பற்றிய பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]