கடவுச்சீட்டு, தேசிய அடையாள அட்டையை பிரதேசங்களில் பெற்றுக்கொள்ள புதிய வசதி

இனிமேல் தேசிய ஆளடையாள அட்டையை நாட்டின் சகல பாகங்களிலுமுள்ள பிரதேச செயலகங்களிலும் பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் வழிவகைகள் செய்யப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஆட்பதிவுத் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நாடளாவிய ரீதியில் உள்ள 331 பிரதேச செயலகங்களில் அமைக்கப்பட்டுள்ள ஆட்பதிவு திணைக்கள கிளைக் காரியாலயங்களில் ஒப்படைக்கப்படும் விண்ணப்பங்கள் ஒன்லைன் மூலமாக கொழும்பில் உள்ள தலைமைக் காரியாலயத்திற்கு அனுப்பி வைக்கப்படுவதன் மூலம் மீண்டும் பிரதேச செயலகம் மூலம் இவ்வடையாள அட்டைகள் விநியோகிக்கப்படும்.

நாட்டின் தொலை தூரப் பிரதேசங்களிலுள்ள மக்கள் தேசிய ஆளடையாள அட்டைகளைப் பெறுவதற்காக கொழும்புக்கு வருவதனை குறைக்கும் நோக்கிலேயே பிரதேச மட்டத்தில் இந்நடவடிக்கை பரவலாக்கப்படுகிறது.
பிரதேச செயலகம் மூலம் இலத்திரனியல் தேசிய ஆளடையாள அட்டை வழங்கப்படுதலை இலகுபடுத்தும் நோக்குடன் மாகாண காரியாலயங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படவுள்ளது.

தற்போது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மட்டும் தேசிய ஆட்பதிவுத் திணைக்களத்தின் மாகாண காரியாலயங்கள் இயங்குகின்றன.
இதேவேளை, மாவட்டச் செயலகங்கள் ஊடாக கடவுச் சீட்டுக்களை வழங்கும் நடவடிக்கைகள் இவ்வருடம் ஜூன் மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படுமென குடிவரவு, குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

கடவுச்சீட்டை பெறுவதற்காக மக்கள் கொழும்பிற்கு வருகை தந்து பணத்தையும் நேரத்தையும் விரயம் செய்து அலைக்கழிவதை நிறுத்தும் நோக்குடன் மாவட்ட மட்டத்தில் குடிவரவு, குடியகல்வு திணைக்கள கிளைக் காரியாலயங்களை அமைத்து ஒன்லைன் மூலமாக கொழும்பில் உள்ள தலைமை காரியாலயத்துக்கு அந்த விண்ணப்பங்களை அனுப்பி வைப்பதன் மூலம் மாவட்டச் செயலகங்கள் மூலம் கடவுச்சீட்டுக்கள் வழங்கப்படவுள்ளன.

தற்போது சகல நாடுகளுக்குமான கடவுச்சீட்டுக்கள் மட்டும் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தால் வழங்கப்பட்டு வருகின்றன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]