மீண்டும்

1. கடற்கன்னி (Mermaid)

இருக்கா? இல்லையா? இருந்தது, தற்போது இல்லாமற் போய்விட்டதா? என்று எமது சிந்தையில் வினா எழுப்பும் பல்வேறு அம்சங்கள் எம் உலகில் உலவுவதை நாம் அறிந்திருக்கின்றோம். அத்தகு அம்சங்களில் சிலவை பற்றிய தொகுப்பே இப்பதிவு.

இணையத்தளங்களில் கடல் கன்னி பற்றிய படங்களும் வீடியோக்களும் அதிகமாகப்
பகிரப்படுவதைக் காணமுடிகிறது. ஆனால் யாரும் முழுமையாக இதை உண்மையென நம்புவதுமில்லை. பொய் என மறுப்பதுமில்லை. உயிரியல் ரீதியில் நோக்கினால் கடல்பசு, கடல்சிங்கம் போன்ற பாலூட்டிகள் கடலில் காணப்படுகின்றன. ஆனால் கடல் கன்னி என்ற உயிரினம் சமுத்திர உயிரியலில் இணைக்கப்படவில்லை.

அவ்வாறு இருக்க கடற்கன்னி பற்றிய சிந்தனைகள் எம்மில் எழுந்தது எவ்வாறு???
கடல் கன்னி என்றதும் ஒரு பெண்ணும் மீனும் கலந்த உடல் சட்டென ஞாபகத்துக்கு
வரும். உடலின் மேல்பகுதி பெண்ணாகவும் அடிப்பகுதி மீனின் வாலாகவும் இருக்கும்
கடல்கன்னியின் படங்களை கார்ட்டூன்கள் மற்றும் ஓவியங்களில் நாம் பார்த்ததுண்டு.
ஆனால், நிஜத்தில்…???

கடற்கன்னி என்பது பெண்ணின் உடலும் மீனின் வால்ச்செட்டையும் கொண்ட ஒரு
நீரியல் கற்பனை உருவம் ஆகும். கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே கடல்கன்னி பற்றிய
கதைகள் சிரியாவில் வலம் வரத் தொடங்கிவிட்டன. ஐரோப்பா, ஆப்ரிக்கா மற்றும்
ஆசியாவிலும் கடல்கன்னி பற்றிய கதைகள் ஏராளம் உள்ளன. கடற்கன்னி பற்றிய
நாட்டாரியல் ஐரோப்பா, சீனா , இந்தியா என உலகலாவிய கலாசாரங்களில்
காணப்படும் ஓர் விடயமாகும்.

கடல்வாழ் உயிரியான கடல்கன்னி தேவதையாக வர்ணிக்கப்படுகிறது.
வெள்ளம், புயல், கப்பல் விபத்துகள் மற்றும் படகுகள் மூழ்கிப்போகும்
சம்பவங்களுடன் கடல்கன்னிகளுக்குத் தொடர்பு இருப்பதாக இப்போதும்கூட
சில நாடுகளில் நம்பப்படுகிறது.

மனதைக் கவரும் ஆண்களுக்குப் பல பரிசுகளையும் வரங்களையும்
கடல்கன்னிகள் வழங்குவார்களாம். கடல்கன்னி அழுது வடிக்கும் கண்ணீர்தான்
கடலில் முத்துகளாகக் கிடைக்கின்றன என்ற நம்பிக்கையும் உள்ளது.

முதன் முதலாக இது பற்றிய கதைகள் புராதன அசிரியாவில் காணப்பட்டது.
அட்டாகடிசு எனும் தேவதை தன் மனிதக் காதலனைத் தவறுதலாகக் கொன்றதும்
அவமானத்தினால் கடற்கன்னியாக மாறினாள் என அக்கதை கூறுகின்றது.

இன்னுமொரு நாட்டாரியல், அவை மனிதாபிமானம், நன்மை செய்தல் அல்லது
மனிதனுடன் காதலில் வீழ்தல் ஆகியவற்றைக் கொண்டிருக்க முடியுமென்று
கூறுகின்றது.

கி.மு.1000 களில் தோன்றிய Syrian தேவி என்ற புராணக்கதையில் கடல் கன்னி
பற்றி இவ்வாறு கூறப்படுகிறது. “syriyan தேவி நீரில் பாய்ந்து திரும்பி வரும்
போது ஒரு மீனாக மாறினாள் ஆனால் அவளின் அழகு மாறவில்லை ஆனால்
மீன் போன்ற வால்ச்செட்டை இருந்தது” அதைத்தொடர்ந்து மேலும் பல
கதைகளிலும் கடல் கண்ணி உரு இடம்பிடித்துள்ளது.

கிரேக்க மன்னன் மகா அலெக்சாண்டரின் தங்கையான திசலோனி இறந்தபிறகு
கடல்கன்னியாக மாறி ஈஜியன் கடலில் வசிப்பதாக ஒரு கதை உள்ளது. அந்தக்
கடலைக் கடக்கும் கப்பல்களை நிறுத்தி மாலுமிகளிடம் திசலோனி ஒரு
கேள்வியைக் கேட்பாளாம். ‘அரசன் அலெக்சாண்டர் உயிரோடு இருக்கிறாரா?’
என்பதே அந்தக் கேள்வி. அலெக்சாண்டர் உலகத்தையெல்லாம் வென்று
ஆரோக்கியமாய் வாழ்கிறார் என்ற பதிலை மாலுமிகள் சொல்ல வேண்டும்.
அந்தப் பதிலில் திருப்தியடைந்தால் மட்டுமே, கப்பலை அமைதியாகத் திசலோனி
அனுமதிப்பாள். தவறாகப் பதில் சொன்னால், கடலில் பெரும்புயலை
உருவாக்கிக் கப்பலை அழித்துவிடுவாளாம்.

கம்போடியா மற்றும் தாய்லாந்தில் கூறப்படும் ராமாயணக் கதையில்
சுவன்னமச்சா என்ற தங்கக் கடல்கன்னியைப் பற்றி கூறப்பட்டிருக்கிறது.
ஒபேரா நாடகங்கள், ஓவியங்கள், தேவாலயச் சிற்பங்களில் காலங்காலமாகக்
கடல்கன்னிகள் இடம்பிடித்துவருகின்றன.

ஆனால்1493 இல் வாரலற்றுப் பிரபல்யங்களுள் ஒருவராகிய நாடோடி கிறிஸ்டோபர்
கொலம்பஸ் அவர்கள் ஆணின் முகத்தோற்றமுள்ள கடல் கன்னி ஒன்றை ஹெய்டி
நாட்டில் கண்டதாகவும் அறிய முடிகிறது. எவ்வாறாயினும், விஞ்ஞானரீதியில் கடல்
கன்னி பற்றிய எந்த ஆதாரங்களும் இல்லை. ஆனாலும், மக்களில் பெரும்பகுதியினர்

கடற்கன்னி உண்டு என்பதை நம்புகின்றனர். இது தற்கால விஞ்ஞான உலகில் விடை
காணப்படாத அம்சமாகவே உள்ளது எனலாம்.

மீண்டும்