கடமை தவறிய 13 பொலிஸாருக்கு இடமாற்றம் – மான்னாரில் சம்பவம்

தமது கடமையை சரியான முறையில் செய்யாத காரணத்தால், மன்னார் மற்றும் உயிலங்குளம் பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த 13 பொலிஸாருக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இந்த இடமாற்றங்கள் நேற்று வழங்கப்பட்டுள்ளது.

மன்னார் முருங்கன் பிரதான வீதி அடைக்கல மோட்டை வாய்க்கால் பகுதியில் உள்ள  புலவுக்காணியில் சட்ட விரோதமான முறையில் ஒருவர் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை தொடர்பில் கடந்த 2 ஆம் திகதி கட்டுக்கரை குள முகாமைத்துவக்குழு உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

இது தொடர்பில் அடைக்கல மோட்டை வாய்க்காலுக்கு பொறுப்பான பொறியியல் உதவியாளரும்   விவசாய அமைப்பின் தலைவரும் நிலமையை நேரில் பார்வையிட சென்ற போது அங்கு உழுது கொண்டிருந்த விவசாயியை நிலமையை பார்வையிடச் சென்ற ஒருவர் புகைப்படம் எடுத்துள்ளார்.

குறித்த புகைப்படங்களை அழிக்குமாறு விவசாயி தெரிவித்ததோடு, அங்கு சென்ற இருவரையும் மண்வெட்டியால் தாக்கியுள்ளார். இதன்போது காயமடைந்த இவர்கள் சிகிச்சைக்காக மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இது குறித்து உயிலங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தபோதும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.

இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை  கட்டுக்கரை குள திட்ட  முகாமைத்துவக் குழு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோருக்கு குறித்த பிரச்சினை தொடர்பில் அறிவிக்கப்பட்டது.

மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்புரைக்கு அமைய, கடந்த புதன் கிழமை இரவு மன்னார் மற்றும் உயிலங்குளம் பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் 13 பொலிஸார் தாக்குதலை மேற்கொண்ட நபரின் வீட்டிற்குச் சென்ற போது குறித்த நபரும்,வீட்டில் இருந்தவர்களும்  சென்ற பொலிஸார் மீது தாக்குதல்களை மோற்கொண்டுள்ளனர்.

இதன் போது அங்கிருந்து தப்பிச் சென்ற பொலிஸார் கைத்துப்பாக்கி ஒன்றை விட்டுச் சென்றுள்ளனர். இதன் காரணமாகவே பொலிஸார் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]