கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுத்த முடிவு முட்டாள்தனமானது – கருணா

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுத்த முடிவு முட்டாள்தனமானது – கருணா

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயா சாணக்கியமான அரசியல்வாதி எனப் பலராலும் கூறப்பட்டாலும். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மேற்கொண்ட நடவடிக்கை போன்று முட்டாள் தனமான நடவடிக்கையை எவரும் மேற்கொள்ள மாட்டார்கள் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பிரதி அமைச்சருமான கருணா அம்மான் (விநாயமூர்த்தி முரளிதரன்) தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தங்களின் சுகபோக வாழ்விற்காகவும், தங்கள் நலன்களுக்காகவும் பாராளுமன்றத்தைப் பயன்படுத்தாமல் எமது மக்களின் பொதுநலன்களில் அக்கறையுள்ளவர்களாகச் செயற்படுவார்களாக இருந்தால் அவர்களை உண்மையிலேயே நாங்கள் வரவேற்கின்றோம் என்றும் அவர் கூறினார்.

மஹிந்த ராஜபக்ஷ பிரதம மந்திரியாக பதவியேற்றமை குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்ததாவது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதம மந்திரியாக பதவியேற்றுமை தொடர்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை (28) தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பிரதி அமைச்சருமான கருணா அம்மான் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து கூறுகையில் – “முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு இந்த நாட்டை முன்னேற்றுவதற்குப் பல வாய்ப்புகள் இருந்தும் அவற்றையெல்லாம் நழுவ விட்டு மஹிந்த குடும்பத்தைப் பழிவாங்க வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தாரே தவிர இந்த நாட்டை முன்னேற்ற வேண்டும், பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என நினைக்கவில்லை.

அமெரிக்க டொலரின் விலை அதிகரிப்பானது ஒரு நாட்டின் முன்னேறாத நிலையினையே காட்டுகின்றது. பிச்சைக்கார நாடாக மாறுவதற்கான அறிகுறிதான் அது. அத்துடன் மத்திய வங்கிக் கொள்ளை, போன்ற பல விடயங்கள் இருக்கின்றன. இன்று அவற்றையெல்லாம் பொறுக்க முடியாமல் தான் இந்த மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது.

பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கின்ற வாய்ப்புகளும் அதிகமாகவே இருக்கின்றன. இந்த வாய்ப்புகளை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக அனைத்து சிறுபான்மைக் கட்சிகளும் அவருக்கு ஆதரவை வழங்க முன்வரவேண்டும்.

அரசியல் யாப்பு என்பது ஒரு போலியான விடயம். ஏனெனில் கடந்த முறை இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் எவ்வித நிபந்தனையுமின்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன் ஆதரவை வழங்கியது. அதன் பின்னரான ஒரு நாடகமாகத் தான் இந்த அரசியல் யாப்பு எழுதப்பட்டது.

இனிவரும் காலங்களிலாவது அவர்கள் திருத்திக் கொள்ள வேண்டும். தற்போது ஒரு சந்தர்ப்பம் இருக்கின்றது. பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பதற்கு மஹிந்த அவர்களுக்கு ஆதரவு தேவை. இந்தத் தருணத்திலாவது சம்பந்தன் ஐயா புத்திசாலியாக இருப்பாராக இருந்தால் வெளியில் இருந்தோ அல்லது உள்ளிருந்தோ, நிபந்தனை அடிப்படையில் ஆதரவைக் கொடுக்க முன்வருவாராக இருந்தால், தமிழ் மக்களுக்கு ஒரு விடிவு எற்படும்.

அரசியல் கைதிகளில் விடயத்தில் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் அவர்களிடம் காலில் கெஞ்சுகின்ற நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. ஆனால் நிபந்தனை அடிப்படையில் சென்றிருந்தால் இவற்றைச் செய்திருக்கலாம்.

உண்மையிலேயே எங்களுக்குப் பிரச்சினைகள் இருக்கின்றது. அரசியற் தீர்வு வர வேண்டும். எமது அரசியற் கைதிகள் விடுபட வேண்டும். அதற்கான நிபந்தனைகளை நாங்கள் இட வேண்டும். எனவே இதற்கான வாய்ப்புகள் பல வந்தும் அவற்றைத் தவற விட்டுக் கொண்டிருக்கின்ற கூட்டமைப்பாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருக்கின்றது என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]