கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 25 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை வழங்க நடவடிக்கை

விஜய் சேதுபதி கஜா புயலால் டெல்டா மாவட்ட மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். காலம் காலமாக அவர்கள் சேர்த்து வைத்த சொத்துக்களை கஜா புயல் சூறையாடி சென்றுள்ளது.

வீடுகளையும் இழந்து குடிக்க தண்ணீர் கூட இல்லாமல் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் அடுத்தது என்ன செய்வது என்று தெரியாமல் நிர்கதியாக நிற்கும் இவர்களுக்கு தொடர்ந்து உலகம் முழுவதும் இருக்கும் மக்கள் ஆதரவுக் கரம் நீட்ட வேண்டும் என்ற குரல் எழுந்து வருகிறது.

இதைத் தொடர்ந்து ரூ. 25 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை வழங்குவதாக நடிகர் விஜய் சேதுபதி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், ”கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முழுவதுமாக மின்சாரம் கிடைக்க பத்து நாட்கள் ஆகும் என்பதால், அவர்களுக்கு உடனடியாக தேவைப்படும் ”சார்ஜிங் டார்ச் லைட்” ஆயிரக்கணக்கில் வழங்கப்படும். லட்சக்கணக்கான மரங்கள் அழிந்து நாசமாகிவிட்டதால், அதற்கு முன்னுரிமை கொடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் தோப்புகளை முழுவதுமாக புனரமைத்து தரப்படும்.

அவர்கள தங்களது பிள்ளைகள் போல வளர்த்து வந்த தென்னை, பலா போன்ற மரங்களின் கன்றுகளை மீண்டும் அவ்விடத்தில் புதிதாக நட்டு வைக்கப்படும். இதற்கான களப்பணிகளில் என்னுடைய ரசிகர்களும் ஈடுபடுவார்கள். நிவாரண நிதி தேவைப்படுபவர்களை ரசிகர் மன்றத்தின் மூலம் கண்டறிந்து அவர்களுக்கு ரசிகர் மன்ற நிர்வாகிகள் மூலம் நிவாரண நிதி வழங்கப்படும்” என்றார்.

இதனிடையே கஜா புயல் மற்றும் கனமழையின் காரணமாக உயிரிழந்த குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ள விஜய் சேதுபதி, அந்த குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளை செய்ய இருப்பதாக தெரிவித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]