கச்சதீவு திருவிழாவில் தமிழ் – சிங்கள மொழிகளில் ஆராதனை

கச்சதீவு புதிய அந்தோனியார் ஆலயத் திருவிழாவில் சிங்கள மொழியிலும் திருப்பலி நடத்தப்படவுள்ளதாக கடற்படையின் பேச்சாளர் கொமடோர் தினேஸ் பண்டார தெரிவித்துள்ளார்.

“கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்தியாவில் இருந்து 5000 பேரும், இலங்கையில் இருந்து 8000 பேரும் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன், கச்சதீவு திருவிழாவில் முதல் தடவையாக, தமிழ் மொழியுடன், சிங்களத்திலும் திருப்பலி ஆராதனை நடத்தப்படவுள்ளது. காலி மறைமாவட்ட ஆயர் ரேமன்ட் விக்கிரமசிங்க ஆண்டகை சிங்களத்தில் ஆராதனையை நிகழ்த்துவார்.

கச்சதீவு திருவிழாவில், ஏனைய பகுதிகளைச் சேர்ந்த மக்களையும் பங்கேற்க ஊக்குவிக்கும் வகையிலேயே சிங்கள மொழியிலும் ஆராதனையை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்கள் இரண்டு நாட்கள் தங்குவதற்கான வசதிகளையும், உணவு வசதிகளையும் கடற்படையினர் ஏற்படுத்திக் கொடுக்கவுள்ளனர்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்