ஓ.பி.எஸ். – இ.பி.எஸ். அணிகள் இணைந்தன:துணை முதல்வராக ஓ.பி.எஸ். நியமனம்

நீண்ட இழுபறிக்குப் பின்னர் ஓபிஎஸ்-இபிஎஸ் அணிகள் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுலவகத்தில் இன்று ஒன்றிணைந்தன.

ஓ.பி.எஸ். தரப்பினர் விதித்த முக்கிய நிபந்தனைகளை எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் ஏற்றுக் கொண்டதையடுத்து அ.தி.மு.க. அணிகள் இணைப்பு குறித்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டது. சசிகலாவை விலக்கி வைத்து விட்டு ஆட்சி மற்றும் கட்சியை வழி நடத்துவதில் அதிகாரப்பகிர்வு செய்வதில் இரு தரப்பினருக்கும் இடையே சற்று இழுபறி ஏற்பட்டது. நேற்று அதில் உடன்பாடு ஏற்பட்டது.

எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக தொடர்வது என்று இரு தரப்பினரும் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர். அதுபோல சசிகலாவை நீக்கிய பிறகு கட்சியை வழி நடத்த 15 பேர் கொண்ட வழிகாட்டும் குழு உருவாக்கவும், அந்த குழுவுக்கு ஓ.பன்னீர்செல்வத்தை தலைவராக தேர்வு செய்ய இரு தரப்பினரும் சம்மதித்தனர்.

இவை தவிர மந்திரி சபையை மாற்றம் செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இரு அணிகளிடமும் இத்தகைய ஒருமித்த கருத்து உருவானதும் இன்று அணிகள் இணைப்பை நடத்த முடிவு செய்தனர்.

அதன்படி இன்று காலை இரு அணி தலைவர்களும் தனித்தனியே ஆலோசனை நடத்தினார்கள். அதன்பின்னர் பிற்பகல் 2 மணியளவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்திற்கு வந்தனர். இதேபோல் ஓ.பி.எஸ். அணி நிர்வாகிகள் சிறிது நேரத்தில் தலைமை அலுவலகத்திற்கு வந்தனர். ஓ.பன்னீர்செல்வம் 2.40 மணியளவில் தலைமை அலுவலகம் வந்து சேர்ந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து இரு தரப்பினரும் அணிகள் இணைந்ததை முறைப்படி அறிவித்தனர். ஒரே மேடையில் ஓ.பன்னீர்செல்வம், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியுடன் கைகோர்த்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

அதேசமயம் டிடிவி தினகரன் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் தனியாக ஆலோசனை நடத்தினார். அவரது நிலைப்பாடு குறித்து பின்னர் அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அ.தி.மு.க.வின் இரண்டு முக்கிய அணிகளான ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் அணிகள் இன்று தலைமை அலுவலகத்தில் ஒன்றிணைந்தன. அணிகள் இணைப்புக்கு ஓபிஎஸ் தரப்பு தெரிவித்த கோரிக்கைகள் அனைத்தும் ஏற்கப்பட்டுள்ளன. அதன்படி, கட்சியை வழிநடத்த 11 பேர் கொண்ட வழிகாட்டுக் குழு அமைக்கப்பட உள்ளது.

மேலும், கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் அறிவிக்கப்பட்டுள்ளார். இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும், துணை ஒருங்கிணைப்பாளர்களாக கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேசமயம் அமைச்சரவை மாற்றம் தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் துணை முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு நிதித்துறை, வீட்டு வசதி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

மாபா பாண்டியராஜனுக்கு தொல்லியல்துறை, தமிழ் வளர்ச்சி துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உடுமலை ராதாகிருஷ்ணனுக்கு கால்நடைத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாலகிருஷ்ண ரெட்டிக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]