ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு அனுமதி?

ஜெர்மனியில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டபூர்வமான அனுமதி வழங்க இடது சாரிகள் மற்றும் ஓரின சேர்க்கையாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

அது குறித்த சட்டமசோதா ஜெர்மனி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீதான வாக்கெடுப்பு நேற்று நடத்தப்பட்டது.

ஓரின சேர்க்கையாளர்

அதில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு ஆதரவாக சட்டம் நிறைவேறியது. இந்த ஓட்டெடுப்பில் 393 எம்.பி.க்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர். அதே நேரத்தில் 226 பேர் எதிராக ஓட்டுப் போட்டுள்ளனர்.

ஆனால் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் இந்த மசோதாவுக்கு எதிராக வாக்களித்தார். இவர் வருகிற செப்டம்பர் 24-ந்தேதி நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் 4-வது முறையாக பிரதமர் பதவிக்கு போட்டியிடுகிறார்.

ஜெர்மனி சட்டப்படி ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே நடைபெறும் திருமணத்தையே தான் அங்கீகரிப்பதாக அவர் கூறினார்.

இதற்கிடையே சட்டம் நிறைவேறியதால் பாராளுமன்றம் வெளியே கூடியிருந்த ஆயிரக்கணக்கான ஓரின சேர்க்கையாளர்கள் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். ஒருவரையொருவர் கட்டித் தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.