ஓரம்கட்டப்பட்ட மங்கள

ஐ.நா மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதைக் கண்காணிப்பதற்கும் ஒருங்கிணைப்பதற்குமான பொறிமுறை ஒன்று இலங்கை அரசால் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் சேர்த்துக்கொள்ளப்படாமல் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஓரம்கட்டப்பட்டுள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கடந்த மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசு இணங்கியிருந்தது.

அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் தீர்மானத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கைக்கு காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த தீர்மானத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான அமைச்சர்கள் மட்டக் குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் அளித்தது. அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த யோசனையைச் சமர்ப்பித்திருந்தார்.

இதன்படி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அமைச்சர்கள் மட்டக் குழுவும், அதற்கு உதவும் வகையில் அதிகாரிகள் மட்டக் குழுவொன்றையும் நியமிப்பதற்கு அமைச்சரவையில் அனுமதி அளிக்கப்பட்டது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அமைச்சர்கள் மட்டக் குழுவில், அமைச்சர்கள் ரவி கருணாநாயக்க, மகிந்த சமரசிங்க, சாகல ரத்நாயக்க, விஜேதாச ராஜபக்ஷ, திலக் மாரப்பன, ருவான் விஜேவர்த்தன, மற்றும் ஹர்ஷ டி சில்வா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கடந்த இரண்டரை ஆண்டுகளாக, வெளிவிவகார அமைச்சராக இருந்து, ஜெனிவா நெருக்கடியைக் கையாண்டவரும், ஜெனிவா பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதில் உறுதியான கருத்தை கொண்டிருப்பவருமான நிதியமைச்சர் மங்கள சமரவீர இந்தக் குழுவில் சேர்த்துக் கொள்ளப்படாமை அரசியல் வட்டாரங்களில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர்கள் குழுவின் விபரம் வெளியிடப்பட்ட போது, மங்கள சமரவீர அதில் உள்ளடக்கப்படாவிடின் அது பெரும் தவறாக இருக்கும் என்று அமைச்சர் மலிக் சமரவிக்கிரம, சுட்டிக்காட்டியிருந்தார்.
அப்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மங்கள சமரவீரவுடன், சுதந்திரக் கட்சி அமைச்சர் ஒருவரையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம் என்று கூறினார். இதற்கமைய சுசில் பிரேமஜெயந்தவின் பெயரையும் உள்ளடக்க பரிந்துரைக்கப்பட்டது.

எனினும், நிதியமைச்சில் தமக்கு அதிகம் வேலை இருப்பதால் இந்தக் குழுவில் பங்கேற்க முடியாது என்று மங்கள சமரவீர மறுத்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]