ஓடும் புகையிரதத்தின் முன் பாய்ந்து இளம் பெண் தற்கொலை

ஓடும் புகையிரதத்தின் முன் பாய்ந்து இளம் பெண் தற்கொலை புகையிரத சாரதி மீது சரமாரியான தாக்குதல் என்ஜினுக்கும் சேதம் விளைவிப்பு.

திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கி செவ்வாய்க்கிழமை இரவு (20.02.2018) புறப்பட்ட புகையிரதத்தின் முன் பாய்ந்து யுவதி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சீனக்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

தற்கொலை செய்து கொண்டவர் ஒரு குழந்தைக்குத் தாயான 19 வயதுடைய பெண்ணென அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இச்சம்பவம்பற்றி மேலும் தெரிய வருவதாவது, வழமை போன்று இரவு 7 மணிக்கு திருகோணமலை பிரதான புகையிரத நிலையத்திலிருந்து கொழும்பு நோக்கிப் புறப்படும் புகையிரதம் செவ்வாய்க்கிழமையும் தனது பயணத்தினைத் தொடர்ந்துள்ளது.

தற்கொலை

புகையிரதம் புறப்பட்டு சில நிமிடங்களில் பிரதான புகையிரத நிலையத்திலிருந்து சற்றுத் தொலைவில் ஒரு இளம்பெண் புகையிரதத்தின் முன்னால் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார்.

அவரது சடலத்தை அங்கிருந்து அகற்றி அடுத்து வரும் புகையிரத நிலையத்தில் ஒப்படைப்பதற்காக புகையிரத அலுவலர்கள் முயற்சித்த வேளையில் அங்கு விரைந்த இளைஞர் கும்பலொன்று புகையிரத சாரதியை சரமாரியாகத் தாக்கியதோடு புகையிரத என்ஜினுக்கும் சேதம் விளைவித்துள்ளனர்.
எவ்வாறேனும் பெண்ணின் சடலம் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு அடுத்துள்ள சீனன்குடா புகையிரத நிலையத்தில் புகையிரத அதிகாரிகளால் ஒப்படைக்கப்பட்டது.

மேலும், புகையிரத சாரதி காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அத்துடன் சேதம் விளைவிக்கப்பட்ட என்ஜினுக்குப் பதிலாக மாற்று என்ஜினொன்று ஏற்பாடு செய்யப்பட்டு வேறு ஒரு சாரதி கடமைக்காக நியமிக்கப்பட்டதுடன் புகையிரதத்தின் கொழும்புக்கான பயணம் சுமார் 3 மணிநேர தாமதத்தின் பின்னர் சீனன்குடா புகையிரத நிலையத்திலிருந்து ஆரம்பமானது. அது கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தை புதன்கிழமை காலை 6.30 மணிக்குச் சென்றடைந்தது.

தற்கொலை

வழமையாக இது அதிகாலை 3 மணிக்கு கொழும்பு கோட்டையைச் சென்றடையும் புகையிரதமாகும்.

இந்த காலதாமதத்தாலும் இடம்பெற்ற இடைஞ்சலாலும் புகையிரதப் பயணிகள் பலத்த அசௌகரியத்திற்கும் அச்சத்திற்கும் உள்ளானார்கள்.

இதேவேளை, புகையிரதப் பயணிகளுக்குப் பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டது.
இச்சம்பவம்பற்றி திருகோணமலைப் பொலிஸார் தீவிரமான விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

புகையிரதத்தின் முன்னால் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்திற்குப் பதிலடியாக புகையிரத சாரதி தாக்கப்பட்டதும் புகையிரத என்ஜின் சேதமாக்கப்பட்டதும் திருகோணமலையில் இதுவே முதற் தடவை என்று பொலிஸாரும் புகையிரதப் பயணிகளும் பொதுமக்களும் தெரிவிக்கின்றனர்.