பின் வாசல் வழியாக ஓடிய சுப்பிரமணிய சாமி: விரட்டியடித்த தமிழர்கள்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் இளைஞர்கள் போராட்டங்களை முன்னெடுத்திருந்த நிலையில், அவர்களை சுப்பிரமணிய சாமி, பொறுக்கிகள் என குறிப்பிட்டு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டிருந்தார். இது, தமிழர்கள் மத்தியில் கடும் விமர்சனத்துக்கு உள்ளான நிலையில்,  எப்படியாவது சுப்பிரமணிய சாமிக்கு தங்கள் எதிர்ப்பை காட்ட வேண்டும் என நினைத்திருந்த தமிழர்களுக்கு ஒரு வாய்ப்பு வந்தது.
சுப்பிரமணிய சாமி
  அதன்படி, இந்தியப் பாரம்பரியமும் கலாச்சாரமும் என்ற தலைப்பில் பேசுவதற்காக சுப்ரமணியசாமி அமெரிக்காவின் சியாட்டல் நகருக்கு வந்திருக்கிறார் என்ற செய்தி, அங்குள்ள தமிழர்களின் காதுகளுக்கு எட்ட, விழா நடைபெறும் கட்டிடத்தின் முன்பாக கூடிய நூற்றுக்கணக்கான தமிழர்கள், சுப்பிரமணிய சாமிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அத்தோடு, நிகழ்ச்சி முடியும் வரை அங்கேயே காத்திருந்த தமிழர்கள், விழா மேடையில் இருந்து அவர் வெளியே வந்ததும், மீண்டும் அவருக்கு எதிராக முழக்க மிட ஆரம்பித்தனர்.
  அதிலும் குறிப்பாக, அங்கிருந்து ஒரு தமிழ்ப் பெண் மிகவும் ஆவேசத்துடன், “தமிழர்களை எப்படி பொறுக்கி என்ற சொல்லலாம். எங்கள் தமிழக இளைஞர்களின் கண்ணியத்தையும் கட்டுப்பாட்டையும் பார்த்தீர்களா?
என் அண்ணன் தம்பிகளை பொறுக்கி என்று பேச உங்களுக்கு யார் உரிமை தந்தார்கள். நாகரீகமாக பேசத் தெரியாத நீங்களா இந்தியக் கலாச்சாரம் பற்றி பேசுகிறீர்கள்,” என்று ஆங்கிலத்தில் உரத்த குரலில் முழங்கினார். இதை சற்றும் எதிர்பார்த்திராத சுப்பிரமணிய சாமி, அதிர்ச்சியில் அங்கிருந்து உடனடியாக கிளம்பி விட்டார்.