ஒரே நாளில் 11 படங்கள் ரிலீஸால் சிக்கல்

பெரிய நடிகர்கள் படங்கள் வெளிவரும்போது சிறுபட்ஜெட் படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பதில்லை என்ற புகார் நீண்ட நாட்களாக இருக்கிறது. இதனால் பெரிய படங்களுக்கு முன்பாக தங்கள் படங்களை ரிலீஸ் செய்யும் நோக்கில் கடந்த வாரம் ஒரே நாளில் 11 படங்கள் வெளிவந்தன. இதுபற்றி தயாரிப்பாளர் சங்கத்தில் ஆலோசிக்கப்பட்டது. இதுகுறித்து கிரண், வந்தனா, திவ்யா நடிக்கும் ‘கேக்காமலே கேக்கும்’ பட ஆடியோ விழாவில் பங்கேற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயலாளர் கதிரேசன் கூறியது: சிறுபட்ஜெட் படங்களை நல்ல முறையில் வெளியிடுவது குறித்து பல்வேறு வழிமுறைகளை தயாரிப்பாளர் சங்கம் செய்து வருகிறது.

சில சமயம் 10 அல்லது 11 படங்களை ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்து நம்மை நாமே அழித்துக்கொள்ளும் நிலை ஏற்படுகிறது. இந்த சிக்கலையும் நல்ல முறையில் வரைமுறைப்படுத்த தயாரிப்பாளர் சங்கத்தில் பேசப்பட்டு வருகிறது. விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும். கேக்காமலே கேக்கும் படத்தின் போஸ்டரே அது திகில் படம் என்பதை உணர்த்துகிறது. அப்படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் பட தயாரிப்பாளர் சி.வெங்கடேஷ், இயக்குனர் கே.நரேந்திரபாபு, பட அதிபர் பி.டி.செல்வகுமார் பங்கேற்றனர்.