ஒரு பிரசவம் கூட வீடுகளில் நிகழக் கூடாது என்பதே சுகாதாரத் துறையின் எதிர்பார்ப்பாகும் மகப்பேற்று விஷேட வைத்திய நிபுணர் எம். திருக்குமார்

பிரசவ காலத்தில் தாய் சேய் மரணங்களைத் தவிர்த்துக் கொள்வதற்காக ஒரு பிரசவம் கூட பாரம்பரிய முறைப்படி வீடுகளில் நிகழக் கூடாது என்பதே சுகாதாரத் துறையின் எதிர்பார்ப்பாகும் என மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மகப்பேற்று விஷேட வைத்திய நிபுணரும் மட்டக்களப்பு மருத்துவக் கல்லூரி சிரேஷ்ட விரிவுரையாளருமான எம். திருக்குமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு – ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் ஒரு சில வீடுகளில் இடம்பெறுவதாகக் கூறப்படும் மகப்பேறுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான விளக்கமொன்றை திங்கட்கிழமை 09.07.2018 அவர் வெளியிட்டார்.

இது குறித்து மேலும் தெரிவித்த அவர்,
இலங்கையில் வீடுகளைத் தவிர்த்து வளமுள்ள சிறந்த இடங்களிலேயே பிரசவங்கள் நிகழ வேண்டும் என அரசாங்கம் கருதுகின்றது.
இந்த நோக்கத்தை அடைந்து கொள்வதற்காகவே சுகாதாரத்துறை சார்ந்தோரும் பணியாற்றுகின்றனர்.

இலங்கையில் ஆரம்ப காலத்திலிருந்து இன்று வரையுள்ள நிலைமையை உற்று நோக்கினால் பிரசவத்தின்போது நிகழும் தாய் மரண வீதம் படிப்படியாகக் குறைந்து கொண்டே வந்திருக்கின்றது. இதற்கு சுகாதாரத் துறையின் முன்னேற்றகரமான செயற்பாடுகளே காரணம்.

ஆரம்ப காலங்களில் மகப்பேற்றின்போது தாய் சேய் மரண வீதம் அதிகரித்த அளவில் நிகழ்ந்தமைக்கு பாதுகாப்பற்ற வீடுப் பிரசவங்களே காரணமாக அமைந்து விட்டிருப்பதை அறியக் கூடியதாக இருக்கும்.
சுகாதார அமைச்சின் கரிசனையின்படி என்ன காரணம் கொண்டும் வீட்டுப் பிரசவங்கள் நிகழக் கூடாது என்பதே கண்டிப்பான நிலைப்பாடாகும்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வருடத்தில் 5 அல்லது 6 தாய்மாரே பல்வேறுபட்ட காரணங்களால் பிரசவத்தின்போது இறக்கும் சந்தர்ப்பம் ஏற்படுகிறது.

வைத்தியசாலைகளில் ஒரு தாயின் பிரசவத்தின்போது வைத்தியர்களும், தாதியர்களும் மற்றும் அதனோடு தொடர்புபட்ட சகல பணியாளர்களும் அந்த மகப்பேற்றை பாதுகாப்பானதாக மேற்கொள்வதற்கும் தாய் சேய் நலனைப் பாதுகாத்துக் கொள்வதற்கும் எவ்வளவு பிரயாசைப்படுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

அதேவேளை வீடுகளில் எதுவித பாதகாப்புமில்லாத நிலையில் பிரசவம் நிகழும்போது அது தாய்க்கும் சேய்க்கும் எவ்வளவு ஆபத்தானது என்பதையும் புரிந்து கொள்ள முடியும்.

வீடுகளில் பிரசவம் நடப்பது மிக மிக ஆபத்தானது.
எந்த மதத்தை அனுஷ்டிப்பவராக இருந்தாலும் அடிப்படையில் ஆரோக்கியமாக உயிர்வாழ்வதையும் உயிர்வாழும் உரிமையையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

மத நம்பிக்கைகள் என்ற பெயரில் ஆரோக்கியத்திற்குக் கேடான கோட்பாடுகளினால் உந்தப்பட்டு சுகாதாரத்துறையின் முயற்சிகளுக்குக் குந்தகமாக நடந்து கொண்டு பாதுகாப்பற்ற முறையில் எதுவித வசதிகளுமில்லாத வீடுகளில் தாய் சேய் பிரசவங்களை ஊக்குவிப்பதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

ஆரோக்கியமான பாதுகாப்பான மகப்பேற்றுக்காக இலங்கை அரசாங்கம் பெருந்தொகைப் பணத்தைச் செலவு செய்கிறது. எனவேஇந்த நலனோம்பு வசதிகளை சிறந்த முறையில் பயன்படுத்தி வைத்தியசாலைகளில் பிரசவங்கள் நிகழ்வதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்” என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]