ஒருபக்கச்சார்கபான நிதியொதுக்கீடு தொடர்பில் ஆட்சேபணை வேலைத்திட்டம் – இரா.துரைரெத்தினம்

ஒருபக்கச்சார்கபான நிதியொதுக்கீடு தொடர்பில் ஆட்சேபணை வேலைத்திட்டம் – இரா.துரைரெத்தினம்

உள்ளுராட்சி அமைச்சும், நகர அபிவிருத்தி அதிகாரசபையும் ஒரு பக்கச்சார்பான நிதி ஓதுக்கீடு செயற்பாடு தொடர்ந்த வண்ணம் இருந்தால் இதை தடுத்து நிறுத்துவதற்கான ஆட்சேபணை வேலைத்திட்டங்கள் எம்மால் மேற்கொள்ளப்படும். இதை இனரீதியாகவோ, கட்சி ரீதியாகவோ உற்றுநோக்கக்கூடாதென முன்னாள் கிழக்குமாகணசபை உறுப்பினரும், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முக்கியஸ்தருமான இரா.துரைரெத்தினம் தெரிவித்தார்.

மட்டக்களப்பிலுள்ள அலுவலகத்தில் புதன்கிழமை பகல் நடைபெற்ற கலந்துரையாடலின் போது கட்சி அங்கத்தவர்கள் மத்தியில் முன்னாள் கிழக்குமாகணசபை சிரேஸ்ர உறுப்பினரும், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முக்கியஸ்தருமான இரா.துரைரெத்தினம் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், உள்ளுராட்சி அமைச்சும், நகர அபிவிருத்தி அதிகார சபையும் ஒருபக்கச் சார்பாக நிதி ஓதுக்கீடு கடந்த ஆண்டுகளில் மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ் உள்ளுராட்சி சபைகளுக்கு செய்ததை கடந்த வாரங்களில் அதிமேதகு ஜனாதிபதிக்கும் ஏனையவர்களுக்கும் சுட்டிக்காட்டியது குறிப்பிடத்தக்கதாகும்.

2018ம் ஆண்டு 08ம்மாதம் 14ம் திகதி வரையும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மாநகரசபை, பிரதேசசபை போன்ற உள்ள+ராட்சி சபைகளுக்கு நகர அபிவிருத்தி அதிகாரசபை, உள்ளுராட்சி அமைச்சு ஊடாக அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதேவேளை வேறு மாவட்டங்களிலுள்ள மாநகரசபைக்கு நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டு பலகோடி ரூபா வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்படப்போவதாக அறியக் கூடியதாக உள்ளது.

கடந்த காலங்களில் உள்ளுராட்சி அமைச்சினாலும், நகரஅபிவிருத்தி அதிகாரசபையினாலும் ஒருபக்கச் சார்பாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ் உள்ளுராட்சி சபைகளை புறக்கணித்ததன் காரணமாக வலுவிழந்ததாக பல உள்ளுராட்சி சபை இருந்து வந்தது குறிப்பிடத்தக்கதாகும். இச் செயற்பாடானது உள்ளுராட்சி தேர்தல் நடத்தப்பட்டு மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்ட பின்னரும் தமிழ்சமூகம் கிராமரீதியாக அரசியல் உரிமை தொடர்பாகவும், அபிவிருத்தி தொடர்பாகவும் பட்டிதொட்டிகள் எல்லாம் பேசுகின்ற அளவிற்கு வலு இழந்த நிலையில் இப்படி நடப்பது வருத்தத்திற்குரிய விடயமாகும்.

மத்திய அரசினாலும்,மாகாணசபையினாலும் நிதி நிறுவனங்களினாலும் நிதி ஓதுக்கீடு செய்வதும் புதிய உள்ளுராட்சி சபை உருவாக்கல், உள்ளுராட்சி சபைகளை தரம் உயர்த்துதல், நியமனம் வழங்குதல் போன்ற விடயங்களில் மறைமுகமான ஒரு பாராபட்சம் காட்டப்பட்டுள்ளது நன்கு அறிந்த விடயமாகும். கட்சி ரீதியாகவும், இனரீதியாகவும் கிழக்கு மாகாணத்திலும், மட்டக்களப்பு மாவட்டத்திலும் வேலைத் திட்டங்களை முன்னெடுப்பது இனங்களுக்குள் நம்பிக்கையீனத்தை கடந்த காலத்தைப் போல் ஏற்படுத்தும். அவைமட்டுமின்றி நேரடியாக தமிழர்களுக்கு எதிராக சூட்சி செய்ததை அம்பலப்படுத்தி உள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் வாகரைப்பகுதியில் கஜுவத்தை என்னும் கிராமத்தில் நடுத்தர வர்க்கத்திற்குரிய 600ஏக்கர் காணியில் இராணுவமுகாம் அமைக்கப்பட்டும், மாங்கேணி, பணிச்சங்கேணிப் பகுதியில் 2000ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட மீன்பிடிச்சூழலில் உள்ள காணிகளை மீன்பிடி அமைச்சு பிரகடனப்படுத்தியும், கடந்த மாதம் 250ஏக்கர் காணியை கயூவத்தையில் ஊர்காவல் படைக்கு வழங்குமாறும், புணானையில் 25ஏக்கர் காணியை கலாசாரத்திற்கு வழங்குமாறும் மகாவலிக்குரிய தமிழ்பகுதிகளுக்குரிய காணிகளில் மூன்று இனத்திற்கும் காணி வழங்கும் திட்டத்தையும் முடக்கி விடப்பட்டுள்ளன.

இந்நிலையில் புணானை கிழக்கு, ரிதிதன்னை போன்ற பகுதிகளை ஏனைய பிரதேச செயலகத்துடன் இனைத்தும், வாகரை பிரதேச செயலகம் ஒன்று இல்லாமலாக்கும் சதித்திட்டத்தை மத்தியஅரசு அரங்கேற்றுகின்ற நிலையில் கெவுளியாமடு கிராமத்தில் திட்டமிட்ட சிங்களக்குடியேற்றத்தை குடியேற்றி 17 குடும்பங்கள் 500 குடும்பங்களாக மாறுகின்ற நிலையிலும், புணானை கிழக்கில் 07குடும்பங்கள் 150குடும்பங்களாக மாறும் நிலையிலும், மங்களகம பகுதியில் கால்நடை பண்ணையாளர்களை சில பொலிசார் அச்சுறுத்தி வருகின்றனர்.

ஆறு பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள எல்லைக் கிராமங்களில் 15கிராம மக்கள் பத்து ஆண்டுகளாக யானைகளினால் துன்பப்படும் நிலையிலும் தொடர்ச்சியாக மத்தியஅரசு அமைச்சு ஊடாக ஒதுக்கப்படும் நிதிகள் ஒரு பக்கச்சார்பாக நிதி ஓதுக்கி வருகிறது.

உன்னிச்சைக் குளத்திலிருந்து நீரை எடுத்து ஆயித்தியமலை சந்தி வரையும் தமிழ்மக்கள் குடிப்பதற்கு நீரின்றி பரிதவிக்கின்ற வேளையில் நிரந்தரமாக குடிநீரை வழங்காமல் ஏனைய பகுதியான ஓட்டமாவடி பகுதிகளுக்கு நீரைக் கொண்டு செல்வதில் நிதி ஓதுக்கீடுகள் ஓதுக்கப்படுகின்றன.அயல் கிராமமான நாசிவன்தீவு கிராமத்தில் வாழும் மக்கள் (உப்புத்தண்ணீர்) உவர்நீர் அருந்தும் நிலை உள்ளது.

பெரியபுல்லுமலை கிராமம் நிலத்தடி நீர் இன்றி வரட்சி ஏற்படுகின்ற பிரதேசத்தில் குடிதண்ணீர் விற்பனை செய்யும் அளவிற்கு திட்டத்தை தயாரித்தலும் இது போன்ற மோசமான, ஒருபக்கச்சார்பான செயற்பாடுகளை செய்து வருவதை அரசாங்கம் நிறுத்தவேண்டும். இது தொடரப்படுமானால் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ் மக்களாகிய எமது நிலை கவலைக்கிடமாக மாறும். எனவே மேற்குறிப்பிட்ட தவறான பொருளாதாரக் கொள்கை, நிதிஓதுக்கீடு, காணி பகீர்ந்தளிப்பு, போன்ற விடயங்களை நிறுத்த மத்திய அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அர் தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]