ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா கோலாகலமாக நாளை ஆரம்பம்

10ஆவது இந்தியன் பிரிமீயர் லீக் (ஐபில்) கிரிக்கெட் போட்டிகள் நாளை ஆரம்பமாகவுள்ளது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் மோதவுள்ளன.

இந்தியன் பிரிமீயர் லீக் என்று அழைக்கப்படும் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. வீரர்கள் ஏலம் முறையில் எடுக்கப்பட்டது, பல நாட்டு வீரர்கள் ஒரு அணியில் இணைந்து ஆடியது ஆகியவற்றின் காரணமாக இந்தப் போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருந்தது. கோடிக்கணக்கில் பணம் புரண்டதால் இந்தப்போட்டி வர்த்தக ரீதியாக நடத்தப்பட்டது. அதே நேரத்தில் ரசிகர்களுக்கு நல்ல பொழுது போக்காகவும் அமைந்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி டேர்டெவில்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய 8 அணிகள் கலந்துகொண்டன.

2008ஆம் ஆண்டு நடந்த முதல் ஐ.பி.எல். போட்டியில் வார்னே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சாம்பியன் பட்டம் பெற்றது. பாராளுமன்ற தேர்தல் காரணமாக 2009ஆம் ஆண்டு போட்டி இந்தியாவில் இருந்து தென்னாப்பிரிக்காவுக்கு மாற்றப்பட்டது. இதில் கில்கிறிஸ்ட் தலைமையிலான டெக்கான் சார்ஜர்ஸ் அணியும், 2010ஆம் ஆண்டு டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்சும் சாம்பியன் பட்டம் பெற்றன.

4ஆவது போட்டியில் கூடுதலாக புனே வாரியர்ஸ், கொச்சி டஸ்கர்ஸ் ஆகிய 2 புதுமுக அணிகள் பங்கேற்றன. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியே சாம்பியன் பட்டம் பெற்று தொடர்ந்து 2ஆவது முறையாக ஐ.பி.எல். கோப்பையை வென்றது.

5ஆவது ஐ.பி.எல். போட்டியில் 9 அணிகள் விளையாடின. விதிமுறை மீறி செயல்பட்டதால் கொச்சி டஸ்கர்ஸ் அணி நீக்கப்பட்டது. இதில் காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கோப்பையை வென்றது.

2013இல் நடந்த 6ஆவது போட்டியில் டெக்கான் சார்ஜர்ஸ் அணி நீக்கப்பட்டதால் சன்ரைசர்ஸ் அணி விளையாடியது. இதில் மும்பை இந்தியன்ஸ் கோப்பையை வென்றது. அந்த போட்டியோடு புனே வாரியர்ஸ் அணி கலைக்கப்பட்டது.

7ஆவது ஐ.பி.எல். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இந்தியாவில் போட்டி நடந்தது. 8 அணிகள் பங்கேற்ற இந்தப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2ஆவது முறையாக கோப்பையை வென்றது.

2015ஆம் ஆண்டு நடந்த ஐ.பி.எல். போட்டியில் மும்பை இந்தியன்ஸ் சாம்பியன் பட்டம் பெற்றது. 2ஆவது முறையாக கோப்பையை வென்றது.

கடந்த ஆண்டு ஸ்பாட்பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளுக்கு 2 ஆண்டு தடை விதிக்கப்பட்டது. அவற்றுக்கு பதிலாக ரைசிங் புனே சூப்பர் ஜெய்ன்ட்ஸ், குஜராத் லயன்ஸ் ஆகிய 2 அணிகள் 2 ஆண்டுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டன. கடந்த ஆண்டு (2016) நடந்த போட்டியில் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் கோப்பையை வென்றது.

10ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. மே மாதம் 21ஆம் திகதி வரை 41 நாட்கள் இந்தப்போட்டி நடக்கிறது.

உலகின் தலைசிறந்த அதிரடி பேட்ஸ்மேன்கள் விளையாடுவதால் எப்போதும் போல இந்த ஐ.பி.எல். போட்டியும் விறுவிறுப்பாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]