ஐ.பி.எல். இன்று ஆரம்பம்

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அதில் இருந்து ஆண்டுதோறும் ஐ.பி.எல். போட்டி நடைபெற்று வருகிறது.

இதுவரை 10 ஐ.பி.எல். போட்டி நடைபெற்று உள்ளன. இதில் மும்பை இந்தியன்ஸ் அதிகபட்சமாக 3 முறை சாம்பியன் பட்டம் பெற்று முத்திரை பதித்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் ஆகிய அணிகள் தலா 2 முறையும், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், டெக்கான் சார்வர்ஸ் ஆகிய அணிகள் தலா ஒரு முறை ஐ.பி.எல். கோப்பையை வென்றுள்ளது.

11ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்குகிறது. மே மாதம் 27ஆம் திகதிவரை இந்த ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா நடக்கிறது.

2 ஆண்டு தடைக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் இந்தப் போட்டியில் பங்கேற்கின்றன. அவற்றோடு நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி டேர்டெவில்ஸ் ஆகிய அணிகள் கலந்து கொள்கின்றன.

8 அணிகளும் 18 வீரர்களை தக்கவைத்துக் கொண்டது. மீதியுள்ள வீரர்கள் அனைவரும் ஏலத்தில் எடுக்கப்பட்டனர். உள்ளூர், வெளியூர் என்ற அடிப்படையில் ஒவ்வொரு அணியும் விளையாடும். அதன்படி ஒவ்வொரு அணிக்கும் 14 ஆட்டம் இருக்கும். மே 20ஆம் திகதியுடன் ‘லீக்’ ஆட்டங்கள் முடிகின்றன. ‘லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும்.

மே 22ஆம் திகதி‘குவாலி பையர்-1’ ஆட்டம் மும்பையிலும், மே 23ஆம் திகதி எலிமினேட்டர் ஆட்டம் மற்றும் மே 25ஆம் திகதி ‘குவாலிபையர்-2’ ஆட்டம் புனேயிலும், மே 27ஆம் திகதி இறுதிப்போட்டி மும்பையிலும் நடக்கிறது.

மும்பை இந்தியன்ஸ் 3 முறையும், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் தலா 2 தடவையும், ராஜஸ்தான் ராயல்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் தலா ஒரு முறையும் ஐ.பி.எல் கோப்பையை வென்றுள்ளன.

ஏற்கெனவே வென்ற அணி ஐ.பி.எல். கோப்பையை வெல்லுமா? அல்லது புதிய அணி சாம்பியன் பட்டம் பெறுமா? என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்- டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

இரு அணிகளும் பலம் பொருந்தியது என்பதால் தொடக்க ஆட்டமே மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் வீரர்கள் ஏலத்துக்கு பிறகு முற்றிலும் மாற்றி அமைக்கப்பட்ட அணிகள் விளையாடுகின்றன.

2 ஆண்டுக்கு பிறகு சூப்பர் கிங்ஸ் அணி விளையாடுவதால் தமிழக ரசிகர்கள் இந்தப் போட்டியை ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

இரு அணிகள் 22 ஆட்டத்தில் விளையாடி உள்ளன. இதில் சென்னை அணி 10 ஆட்டத்திலும், மும்பை அணி 12 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன.